‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு; தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி! ராஜஸ்தான் மாணவி முதலிடம்!

 

நேற்று இரவு வெளியான ‘நீட்’ தேர்வு முடிவில் 715 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று இரவு 11.25 மணியளவில் வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவு. மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார்.

டில்லி மாணவர் ஆஷிஷ் பத்ரா வத்ஷா என்ற மாணவர் இரண்டாம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் என்ற மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 99.9997733 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதே மதிப்பெண் எடுத்த கர்நாடகாவை சேர்ந்த ருச்சா பவாஷி என்ற மாணவிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 30-வது இடத்திலும், மாணவி ஹரிணி 43-வது இடத்திலும் உள்ளனர்.

'டாப் 50'ல் 9 பேர் கர்நாடகாவையும், குஜராத், டெல்லியில் இருந்து தலா 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 4 பேரும், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் இருந்து தலா 3 பேரும், தமிழ்நாடு, ம.பி., அரியானாவில் இருந்து தலா 2 பேரும் 'டாப் 50'ல் இடம் பிடித்துள்ளனர். பஞ்சாப், ஜம்மு, கோவா, உ.பி., ஒடிசா, சட்டீஸ்கர், கேரளாவில் இருந்து தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர். 'டாப் 50'ல் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.