இனி மூக்கு வழியாக தடுப்பூசி... பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!!

 

நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பாடுபட்டு வருகிறார்கள். இதற்கான மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேசமயம் இந்த தொற்று வீரியம் அதிகரித்து மேலும் பரவாமல் இருக்க கொரோனா தடுப்பூசி ஒரு வலிமையான ஆயுதம்போல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் இரண்டாவது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.

இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, அந்நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இன்று வழங்கியுள்ளது. நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக்கினால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு மறுசீரமைப்பு நாசி தடுப்பு மருந்து,18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிரான முதன்மை நோய்த்தடுப்பு மருந்தாக அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்துவதற்காக, இந்திய அரசின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பால் (CDSCO) அங்கீகரிக்கப்படுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.