4-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்... பள்ளி நிர்வாகம் பேரம் பேசியதாக பெற்றோர் குற்றச்சாட்டு!!

 

கர்நாடகாவில் 4-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள கங்கமன்பூண்டி பகுதியில் ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நிஷ்ஹிதா (9) என்ற சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். 

அவர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த மாணவியின் உடலின் வெளிப்புறத்தில் எந்த காயங்களும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தந்தை நாகேந்திரா உறவினர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். தனது மகளின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பள்ளியில் மாணவிக்கு தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் எனப் புகார் அளித்துள்ளனர். 

மேலும் நாங்கள் ரூ.4 லட்சம் தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிது படுத்த வேண்டாம் பள்ளி நிர்வாகம் தங்களிடம் பேரம் பேசியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பள்ளிக்குச் சென்று சிசிடிவிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும் விரைவில் உண்மையை வெளிகொண்டு வருவோம் எனவும் பெங்களூரு டிசிபி விநாயக் பாடீல் தெரிவித்துள்ளார்.