நாட்டை உலுக்கிய கோர விபத்து... நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.!

 

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அருகே உள்ள நவலே பாலத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினால் டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. 

இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் மோதியதில் பலர் காயமடைந்தனர். டேங்கர் லாரி பல வாகனங்கள் மீது வரிசையாக மோதிய இந்த கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் படுகாயமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த வாகன விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த விபத்து காரணமாகப் பாலத்தில் வரிசையாக 48 வாகனங்கள் அப்பளம் போல நசுங்கிக் குவிந்து கிடக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. டேங்கர் லாரி ஒன்றின் பிரேக் செயலிழந்தே இந்த விபத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.