குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 2,000... ஸ்டாலின் ஸ்டைலை கையிலெடுத்த பிரியங்கா காந்தி!! குஷியில் கர்நாடக பெண்கள்

 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சி அரியனையில் அமர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் செயல்பட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பஸ் யாத்திரையை கடந்த 11-ம் தேதி தொடங்கினர். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ‘பிரஜா த்வனி யாத்ரா’ எனும் பஸ் யாத்திரை 11-ம் தேதி துவங்கியது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘க்ருஹ லக்ஷ்மி’ திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், நாங்கள் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கிறது. இந்தத் தொகை நேரடியாக குடும்பத் தலைவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் இந்த வருமானம், விலைவாசி உயர்வு மற்றும் எல்பிஜி விலை உயர்வு ஆகியவற்றின் சுமையை சமாளித்து அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த உதவும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என்று சூப்பரான அறிவிப்பை பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

முன்னதாக அனைத்து வீடுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கிட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.