ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல்

 

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, அம்மாநிலத்தின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து சுமார் ரூ. 20 கோடி ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்ளிட்டோர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் , பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி, ஆரம்ப கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோர் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் பயன்பாடுகள் குறித்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது

இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசிரியர் நியமன ஊழலில் பல கோடி ரூபாய் கைமாறியிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி மற்றும் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோரின் வீடுகளில் ஒரே சமயத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று கூறினார்.

இந்த சோதனை குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம் கூறுகையில், இது, அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அமலாக்கத் துறையின் சோதனை தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.

இந்த சோதனை குறித்து பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், “திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள், தகுதி படைத்த லட்சக்கணக்கான இளைஞர்களை மோசம் செய்து, பணத்திற்காக தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக அமர்த்தியுள்ளனர். சிபிஐ அமலாக்கத் துறை விசாரணை சரியான பாதையில் தான் செல்கிறது என்று கூறினார்.