பானிபூரி வாங்கி தருவதாக கூறி 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கர்நாடகாவில் பயங்கரம்

 

கர்நாடகாவில் பானிபூரி வாங்கி தருவதாக கூறி 8 வயது சிறுமியை 55 வயதுமிக்க நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெக்ராத் ரோட்டில் ஒரு வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகம் முன்பாக ஒரு பெண் பலூன் விற்பனை செய்வது வழக்கம். வியாபாரத்திற்கு வரும் போது அவர், தனது 8 வயது மகளையும் உடன் அழைத்து வருவார்.

அதன்படி, தாயும், மகளும் பலூன் விற்றுக் கொண்டு இருந்தனர். வணிக வளாகம் அருகே சென்று சிறுமி விளையாடி உள்ளாள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு மர்ம நபர், சிறுமிக்கு பானிபூரி வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் அந்த நபருடன் சென்றுள்ளாள்.

இந்த நிலையில், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. உடனே அவர் நடந்த சம்பவங்கள் குறித்து அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் தான் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.