இளைஞரின் வயிற்றில் 63 நாணயங்கள்...  மிரண்டுபோன மருத்துவர்கள்.. ராஜஸ்தானில் சம்பவம்!!

 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செளபாஸ்னி பகுதியில் வசிக்கும் இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் கடந்த 27-ம் தேதி எம்டிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்று வலிக்கான காரணம் குறித்து கண்டறிய இளைஞருக்கு, ஸ்கேன் செய்தனர்.

அப்போது மருத்துவர்கள் வயிற்றில் உலோகக் கட்டி போல் மர்மப் பொருள் ஒன்று தென்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இளைஞரிடம் மருத்துவர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு சுமார் 15 ஒரு ரூபாய் நாணயங்களை அவர் விழுங்கிவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இளைஞரின் வயிற்றிலிருந்து எண்டோஸ்கோப்பி மூலம் நாணயங்களை எடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோப்பி முறையில் இரண்டு நாட்களாக வயிற்றிலிருந்த 63 ஒரு ரூபாய் நாணயங்கள் எடுக்கப்பட்டன.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “36 வயது இளைஞர் கடுமையான வயிற்றுவலி எனகூறி மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு ஸ்கேன் செய்ததில் நாணயங்களை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞருக்கு சிகிச்சையை மேற்கொண்டோம். இரண்டு நாட்கள் நீடித்த சிகிச்சைக்குப் பிறகு இளைஞரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் எடுக்கப்பட்டன. இளைஞர் வெறும் 10 முதல் 15 நாணயங்களே விழுங்கியதாக கூறினார். ஆனால் உண்மையில் அவர் 63 நாணயங்களை விழுங்கி இருந்து இருக்கிறார். அனைத்தும் ஒரு ரூபாய் நாணயங்களாக இருந்தன.

தற்போது அந்த இளைஞர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். ஆனால் அவர் மன உளைச்சலுடனே இருந்து வருகிறார். வித்தியாசமானவற்றை உட்கொள்ளும் மனநிலை கொண்டவராக அந்த இளைஞர் இருப்பதால், அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச்செல்லுமாறு குடும்பத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றனர்.

மன அழுத்தம் உள்ளவர்களை குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.