மாணவிகளுக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை... மகளிர் தனத்தில் அரசு அறிவித்த கிப்ட்!!

 

கேரளாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. 

இந்நிலையில் கேரள பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 6 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஆறு மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பில் செல்லும் மாணவர் மீண்டும் அட்மிஷன் முறைகள் தேவையின்றி வகுப்புகளைத் தொடங்கலாம் என அறிவித்துள்ளது.

மேலும் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ்கள் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் மீண்டும் வகுப்பில் சேர அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளைச் சரிபார்த்து, பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெறாமல் அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர அனுமதிக்கும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் ஏற்கனவே பெண் மாணவர்களுக்கான குறைந்தபட்ச வருகையை 75% லிருந்து 73% ஆக குறைத்துள்ளது.

மேலும், கேரள அரசின் உயர்கல்வித்துறை, அரசு துறையுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்புக்கான நாட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.