40 மாடி கட்டிடம்.. லிப்ட் அறுந்து விழுந்து கோர விபத்து.. 6 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 

மகாராஷ்டிராவில் 40வது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பால்கும் பகுதியில் 40 மாடிகளைக் கொண்ட ருன்வால் காம்பிளக்ஸ் கட்டிடம்  ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அந்த பணி முடிந்ததும் 7 தொழிலாளர்கள் லிப்டில் ஏறி அதன் இயங்கும் திறனை சோதனை செய்தனர். 

அப்போது, திடீரென லிப்ட்டின் கம்பி அறுந்தது. இதனால் உயரத்தில் சென்று கொண்டு இருந்த லிப்ட் பயங்கர சத்தத்துடன் மிக வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில், லிப்டுக்குள் இருந்த தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்டதும் அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து லிப்ட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே தகவல் அறிந்து, தானே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதில் லிப்ட்டுக்குள் சிக்கிய 5 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் மகேந்திர சௌபால் (32), ரூபேஷ் குமார் தாஸ் (21), ஹாரூன் ஷேக் (47), மித்லேஷ் (35), கரிதாஸ் (38) மற்றும் சுனில் குமார் தாஸ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.