300 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு.. வாக்குறுதி அளித்த டெல்லி முதல்வர்!

 

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடந்த பேரணி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடி பேசினார். தனது மருமகன்கள் மற்றும் மருமகள்களையே மோசடி செய்த மாமா மீது நம்பிக்கை வைப்பதனை மக்கள் நிறுத்த வேண்டும் என அப்போது கேட்டு கொண்டார். மாமாவை நம்ப வேண்டாம். உங்களுடைய மகன், சகோதரர் மற்றும் சாச்சா (மாமா) வந்துள்ளார். சாச்சா மீது நம்பிக்கை வையுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.

சவுகானை மக்கள் மாமா என குறிப்பிடுவது வழக்கம். கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, தரம் வாய்ந்த பள்ளிகளை கட்டுவது மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப்பில் இதுபோன்ற பல வாக்குறுதிகளை வழங்கி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியும் வருகிறது.