கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் நீரில் முழ்கி பலி... சுற்றுலாவில் பயங்கரம்!!

 

கேரளாவில் சுற்றுலாப் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் தோவல்தீர்த்தம் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் அட்லான்டிக் என்ற டபுள் டக்கர் சுற்றுலா படகு 30க்கும் மேற்பட்ட சுற்றலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது. அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடியது. இந்த படகு மாலை 7 மணி அளவில் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.