தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உட்பட 2 பேர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு!!

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் பணியிடங்கள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. மேலும் எதிர்வரும் அடுத்தடுத்த நாட்களில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, வி.ராசுப்பிரமணியன், கிருஷ்ண முரளி ஆகியோர் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துவிடும். இந்நிலையில் புதியதாக இரண்டு நீதிபதிகளின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.

ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ராஸ்தோகி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.

இதற்கு ஒன்றிய சட்டத்துறை ஒப்புதல் வழங்கிய நிலையில் இருவரும் இன்று (மே 19) பதவி ஏற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரு நீதிபதிகள் பதவி ஏற்றதன் மூலம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை முழு அளவை எட்டியது.

இளம் வயதில் பொள்ளாச்சி ஆரோக்ய மாதா மெட்ரிக் பள்ளி, அமராவதி சைனிக் பள்ளி, உதகை சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் படித்த கே.வி.விஸ்வநாதன், பின்னர் கோவை சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பை முடித்தார். 1988-ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1990 - 95 வரை மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் ஜூனியராக இருந்தார். உச்சநீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணி புரிந்த அவர் 2009ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றி உள்ளார். சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, ரிட் என பல்வேறு துறை வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்தார்.

இவரது பதவி காலம் 2031 மே 25 வரை உள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள நிலையில், 2031ம் ஆண்டில் 9 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் பட்டியலில் விஸ்வநாதன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். 

தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதி பதவி வரை செல்லவிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன் 1991 - 96 வரை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.