சகோதரியின் ஹல்டி நிகழ்ச்சியில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த 18 வயது இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ!
உத்தரப் பிரதேசத்தில் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிய நோயாக இருந்தது. ஆனால் இப்போது சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக வாலிபர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பிரனரும் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளம் அரங்கேறி வருகிறது.
இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 18 வயது பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்படவே, நெஞ்சில் கைவைத்தபடி மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த அந்த பெண் ரிம்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அன்று மாலை தனது சகோதரியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான ஹல்தி விழாவில் இந்த பெண் உற்சாகமாக நடனமாடிக் கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ரிம்ஷா தனது உறவினர்களுடன் இணைந்து நடனமாடிக் கொண்டு இருக்கிறார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுகிறார். உடனடியாக அருகே இருந்தவர்கள் ரிம்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சமீப நாட்களாகவே இந்தியாவில் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறது. கோடைக் காலத்தில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த அதீத வெப்பமும் கூட மாரடைப்பு ஏற்படுவதை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே சென்றாலும் அதீத வெப்பத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஆடைகளை அணியும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.