பூங்காவில் 17 வயது சிறுவன் கொடூர கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் உள்ள பூங்காவில் 17 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் பேகம்பூரில் உள்ள இந்திரா முகாம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (17). இவரை நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் மதுக்குடிப்பதற்காக அழைத்து இருக்கிறார். இதையடுத்து விவேக் குடும்பத்தாரிடம் தந்தையை பார்க்க போவதாக பொய் செல்லிவிட்டு அந்த நண்பரை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் நன்றாக மதுக்குடித்து உள்ளனர்.
மது போதையில் இருந்த விவேக்கை அவரது நண்பர் அருகில் உள்ள சத்புலா பூங்காவிற்கு அழைத்து சென்று இருக்கிறார். அந்த பூங்காவில் மறைந்திருந்த 5 பேர் கொண்டிருந்த கும்பல் விவேக்கை சரமாரியாக தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் விவேக்கை குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த விவேக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்நிலையில் சத்புலா பூங்காவிற்கு நேற்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவன் விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விவேக்கின் நண்பர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட விவேக்கின் நண்பருக்கும், விவேக்கிற்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து விவேக்கை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட விவேக்கின் நண்பர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.