அரிய வகை அமீபிக் நோய் தாக்கி 13 வயது சிறுமி பலி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கேரளாவில் அரிய வகை அமீபிக் நோயால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் தக்சினா (13). பள்ளி மாணவியான இவருக்கு, திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்று டாக்டர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.