ஆபாச படம் காட்டி 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. மத போதகர் கைது.. கேரளாவில் பரபரப்பு!

 

கேரளாவில் மத போதகர் ஒருவர் ஆபாச படங்களை காட்டி 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவச்சல் குரக்கோணம் பகுதியில், பெந்தகோஸ்தே பிரிவு தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் ரவீந்திரநாத் (59) என்பவர் மத போதகராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில், 13 வயது சிறுவன் ஒருவரை அவர் பார்த்துள்ளார். அவரிடம் தன் கையில் இருந்த டேப் மொபைலை கொடுத்த அவர், அதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனை சரி செய்து தர முடியுமா எனவும் கேட்டு உள்ளார்.

இதையடுத்து அதை கையில் வாங்கிய சிறுவன், அதில் இருந்த புகைப்படங்களை திறந்து பார்த்தபோது, அது ஆபாச படங்களாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த டேப்பை அவரிடமே கொடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவன் கிளம்பிச் செல்ல முயற்சித்தான். அப்போது, ரவீந்திரநாத் சிறுவனை மீண்டும் அருகில் அழைத்து பணம் மற்றும் உணவு தருவதாக சிறுவனை மிரட்டியுள்ளார்.

ஆனால் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று வீட்டில் இருந்த உறவினர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ், ரவீந்திரநாத்தை போலீசார் கைது செய்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திருச்சூர் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வீட்டிற்கு டியூஷன் படிக்க வந்த 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பாபு (59) என்பவருக்கு, திருச்சூர் போக்சோ விரைவு நீதிமன்றம் 97 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.