கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்தில் 13 பேர் பலி.. கடும் பனிமூட்டத்தால் நேர்ந்த கோர விபத்து!
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபூர் நகரின் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே இன்று காலை கான்கிரீட் ரெடி மிக்ஸ் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற டாடா சுமோ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கர சத்ததுடன் மோதியது. விபத்து சத்தம் கேட்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த கோரமான விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தெரிவித்துள்ள பாகேபள்ளி போக்குவரத்து போலீசார், ‘பயணம் செய்தவர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர். எனினும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்தில் பலரின் முகம் அடையாளம் காண முடியாதபடி உள்ளதால் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியவர்கள் யார் யார் என்ற அடையாளம் காணும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.