அமெரிக்க அரசுப் பள்ளிகளில் யோகா! கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்த மாநில அரசு!!

 
Jeremy Gray

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகளுன் அரசுப் பள்ளிகளில் யோகா பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்  தென் மாநிலங்களில் ஒன்றான அலபாமா மக்கள் உரிமைகளுக்கு பெயர் போனதாகும். அலபாமாவின் மாண்ட்கோமரி நகரில் தான் முதலாவது மக்கள் உரிமைப் போராட்டம் தொடங்கியது.

அலபாமா மாநில அரசுப் பள்ளிகளில் யோகா பயிற்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும், இது மாணவர்களுக்கு பயனளிக்கும் என்ற கோரிக்கை 1990 களின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டது. யோகா இந்து மதத்தின் ஒரு பகுதி, யோகா பயிற்சியினால் இந்துக்களாக மதம் மாறுவது நடைபெறும் என்று கிறித்தவ இயக்கங்கள் குரல் எழுப்பியதால் 1993ம் ஆண்டு பள்ளிகளில் யோகா பயிற்சி கூடாது என்ற தடை பிறப்பிக்கப்பட்டது.

ஜனநாயக் கட்சியின் அலபாமா மாநில அவை உறுப்பினர் ஜெரமி க்ரே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பள்ளிகளில் யோகாப் பயிற்சி அவசியம் என்று கூறி ஒரு மசோதாவை கொண்டுவந்தார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் கே ஐவியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் படி அரசுப் பள்ளிகளில் யோகாப் பயிற்சிகள் விருப்பப்பாடமாக KinderKarten  முதல் 12 வகுப்புள் வரையிலும்  அனுமதிக்கப்படுகிறது.  ஆனால், நமஸ்தே சொல்லக்கூடாது, தியானம் செய்யக்கூடாது, மேலும் மந்திரங்கள், முத்திரைகள்,சேர்ந்து ஓதுதல், ஹிப்னாடிஸம் போன்றவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான பயிற்சிகளுக்கும் ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்பட வேண்டும். சமஸ்கிருத சொற்கள் பயன்படுத்தக்கூடாது. நமஸ்தே என்று வணக்கம் சொல்வது கூடவே கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு உடற்பயிற்சி என்ற அளவில் மட்டுமே பெற்றோர்களின் அனுமதியுடன் இந்த யோகா பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

கல்லூரி புட்பால் குழுவில் இருக்கும் போது தான் தனக்கு முதன் முதலாக யோகா பற்றி தெரிய வந்ததாகவும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை யோகாவால் குறைக்க முடியும் என்ற ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் மசோதாவை தாக்கல் செய்த உறுப்பினர் ஜெரமி க்ரே தெரிவித்துள்ளார்.

ஈகிள் ஃபோரம் ஆஃப் அலபாமா என்ற கிறித்தவ அமைப்பு யோகா இந்து மதத்தின் போதனை என்று கருத்துத் தெரிவித்து, யோகாவுக்கான தடை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவது அமெரிக்க அரசியல் சாசனத்தை மீறுவதாகும் என்றும் அந்த கோரிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

யுனிவர்சல் சொசைட்டி ஆஃப் ஹிந்துயிசம் என்ற அமைப்பு, இந்தக் கூற்று உண்மைக்குப் புறம்பானது உலகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி தான் யோகா என்று மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அலபாமா சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு அளித்துள்ளாது.

From around the web