கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி நிதி உதவி செய்த அமெரிக்க இந்திய கோடீசுவரர்!!

 
Vinod-Khosla

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையிலும் அந்த முயற்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. கொரோனா அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வினோத் கோஸ்லா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 500 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 100 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வழங்குமாறு இந்தியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகளிடம் இருந்தும், ஆஸ்பத்திரிகளிடம் இருந்தும் தினந்தோறும் வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதில் தாமதம் செய்வது மேலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, அவசர நிதி உதவியாக ரூ.75 கோடி வழங்குகிறோம். இதுபோல் மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web