உலக நாடுகளுக்கான தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா திகழும்: அதிபர் ஜோ பைடன்

 
உலக நாடுகளுக்கான தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா திகழும்: அதிபர் ஜோ பைடன்

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் களஞ்சியமாக அமெரிக்கா திகழும் என அதிபர் ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

உலகளவில் அமெரிக்கா கொரோனா பாதிப்புகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது.  உயிரிழப்புகளும் அதிகம்.  கொரோனாவின் முதல் அலையில் அந்நாடு சிக்கி தவித்தபொழுது, ஹைட்ராக்சி குளோரோ குயினோன் என்ற மருந்து தட்டுப்பாடு அந்நாட்டில் நிலவியது.

இந்த நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் பிரதமர் மோடி இந்த மருந்துகளை மனிதநேய அடிப்படையில் வழங்குவதற்கான வழிகளை மேற்கொண்டார்.  எனினும், அமெரிக்கா இன்றளவும் பாதிப்புகளில் முதல் இடத்திலேயே உள்ளது.

ஆனால் அதற்கு முன், அமெரிக்காவுக்கு தேவையான மருந்துகளை இந்தியா தரவில்லை எனில் என்ன செய்வீர்கள் என முன்னாள் அதிபர் டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்தியாவை மிரட்டும் தொனியில் டிரம்பிடம் இருந்து பதிலளிக்கப்பட்டது. எனினும், நல்லிணக்க அடிப்படையில் பல லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது.

இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றும்பொழுது, பயங்கரவாதம், அணு ஆயுத பரவல், அதிக அளவில் மக்கள் புலம்பெயர்தல், சைபர் இணைய தாக்குதல், பருவகால மாற்றம் என தனியாக அனைத்து நெருக்கடிகளையும் நம்மை போன்று வேறு எந்த நாடும் எதிர்கொண்டிருக்க முடியாது.

பெருந்தொற்று நம்மை தற்பொழுது சூழ்ந்துள்ளது.  எந்த வைரசையும் தள்ளி வைக்கும் அளவிற்கு பெரிய தடுப்பு சுவர் எதுவும் இல்லை.  நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தடுப்பூசி வினியோகம் வளர்ச்சி கண்டு வருகிறது.  அவற்றை நாம் செயல்படுத்தி வருகிறோம்.

2ம் உலக போரில் ஜனநாயகத்தின் களஞ்சியமாக அமெரிக்கா திகழ்ந்தது. அதேபோன்று பிற நாடுகளுக்கான தடுப்பூசி வழங்கும் களஞ்சியம் ஆக அமெரிக்கா திகழும் என கூறினார்.  எனினும், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இது (பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குதல்) நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web