பத்திரிகையாளர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த தாலிபான்கள்... ஆட்சியில் என்ன நடக்குமோ...? பொதுமக்கள் அச்சம்..!

 
Afghan

இடைக்கால அரசின் பிரதமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தாலிபான்கள் கைது செய்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். இதையடுத்து தாங்கள் கடந்த ஆட்சியிலிருந்ததைப் போல் இருக்கமாட்டோம் என தாலிபான்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், இவர்களின் செயல் ஒவ்வொன்றும், இதற்கு எதிராகவே உள்ளது. கர்ப்பிணி போலிஸ் அதிகாரி, நாட்டுப்புற பாடகர் ஆகியோரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதிய அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது.

Afghan

அன்றைய தினமே ஐந்து பத்திரிகையாளர்களைத் தாலிபான்கள் கைது செய்தனர். இந்நிலையில் தாலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிகையாளர்களை அடித்து நிர்வாணப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக காபூலில் பெண்கள் குழுவினர் போராட்டம் நடத்தினர். அப்போது தாலிபான்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தாலிபான்கள் அவர்களைக் கைது செய்தனர்.

இதையடுத்து இரண்டு பத்திரிகையாளர்கள் தாலிபான்களால் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டதை அமெரிக்கப் பத்திரிகையாளர் மார்கஸ் யாம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டதை அடுத்து பத்திரிகையாளர்கள் கைது, அடித்து சித்திரவதை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளது உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web