ட்விட்டரில் இருந்து ‘கூ’ வலைதளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய நைஜீரிய அரசு!

 
Koo

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகம்மது புஹாரி, டிவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில், பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிபர் புஹாரி ட்விட்டரில், “இன்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பலருக்கு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்த விழிப்புணர்வோ, புரிதலோ இல்லை. 30 மாதங்களாக போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஈடுபப்ட்டு வரும் அதிகாரிகள் பலர், இந்த உள்நாட்டு போரைச் சந்தித்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான்,  பிரிவினைவாதிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என ட்வீட் செய்திருந்தார்.

அதிபரின் இந்த ட்வீட், சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் தவறான நடத்தை என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

அதிபரின் டுவிட்டர் பதிவை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு ட்விட்டருக்கு தடை விதித்தது. ட்விட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் ட்விட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்தது. தடையை மீறி ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ட்விட்டருக்கு தடை விதித்த நைஜீரிய அரசு அதற்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.

’கூ’ செயலியில் நேற்றுமுன்தினம் நைஜீரிய அரசின் அதிகாரப்பூர்வ தொடங்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி ‘கூ’ மூலமாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ‘கூ’ செயலி மூலம் அரசின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை நைஜீரிய அரசு பகிர்ந்து வருகிறது. இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நைஜீரிய அரசு ‘கூ’ செயலியில் இணைந்ததற்கு ‘கூ’ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கூ’ தளத்தில் இணைந்த நைஜீரிய அரசை வரவேற்கிறோம். ‘கூ’ தளம் தற்போது தனது சிறகை இந்தியாவை கடந்து பரப்பத்தொடங்கியுள்ளது என்றார்.

From around the web