யூத மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு

 
யூத மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு

இஸ்ரேலின் வடக்கே மலை பகுதியில் நடந்த யூத மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் 2வது நூற்றாண்டில் வாழ்ந்த யூத மத துறவி ரபி சிமோன் பார் யோச்சாய்.  இவரது மறைவை நினைவுகூரும் வகையில் ‘லேக் போமர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இதில் 28 பேர் சிக்கி பலியானார்கள்.  50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.  மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.  

இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 103 ஆக அதிகரித்துள்ளது.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், மலையில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தனர் என்றும் ஒரு சிறிய பகுதியில் திரளான மக்கள் கூடியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் கூறப்படுகிறது.

From around the web