சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தேர்தல்! ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் தேவை தானா?

 
BATM

அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டு வருபவைகள் ஆகும். சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்  அமெரிக்காவில் முக்கியமான தமிழ்ச் சங்கங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஓராண்டு மட்டுமே பதவிக்காலம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போட்டியின்றே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போட்டிகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க நகராட்சி தேர்தல் போல தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் விவாதம் என்று மிகவும் நேர்த்தியாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே நடைமுறையில் நாளை வியாழக்கிழமை விடியற்காலை 12.01 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரையில் ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Pugal Anbu

தலைவர் பொறுப்புக்காக போட்டியிடும் புகழ் அன்பு இந்தத் தேர்தல் குறித்தும், எதிர்காலத்தில் தமிழ் மன்ற செயல்பாடுகளுக்கான அவருடைய திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். இதோ அவருடனான உரையாடல்,

A1 தமிழ்: வணக்கம், இப்போது தான் தமிழ் மன்றத்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்தது போல் உள்ளது. அதற்குள் அடுத்த தேர்தலா? ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மன்றத்திற்குத் தேர்தல் என்பது நேரம் மற்றும் சக்தி விரயம் என்று தோன்றுகிறதே?

புகழ் : நீங்கள் கேட்ட இதே கேள்வியை என்னிடம் பல மன்ற உறுப்பினர்களே கேட்டுள்ளார்கள். இந்த கேள்வி நியாயமான ஒன்று தான் என நானும் கருதுகிறேன். முந்தைய காலக்கட்டங்களில் தமிழ் மன்றத்திற்குப் பணியாற்ற அதிகளவில் யாரும் முன் வரவில்லை என்பதால் நியமன அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது தமிழ்மன்றத்திற்காகப் பணியாற்ற எண்ணற்றவர்கள் தன்னார்வத்துடன் முன் வரும் நிலை உள்ளது.  அதனால் தேர்தலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

நான் உட்பட தேர்தலில் போட்டியிடும் அனைவரும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதிகளை அளிக்கிறோம். நிர்வாகிகள் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த புதிய சூழலில் ஓராண்டு பதவிக்காலம் என்பது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கூட போதவில்லை என்பது தான் உண்மை. இதை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். எனவே தான் எங்கள் #RisingTheBar குழுவின் சார்பில் ”இரண்டு அடுக்கு அமைப்பு - இரண்டு வருட பொறுப்பு” என்ற முழக்கத்துடன் தமிழ் மன்ற சட்டதிட்டங்களின் சீரமைப்புக்கான முன்னெடுப்பையும் அறிவித்துள்ளோம்.

A1 தமிழ்: இரண்டு வருட பொறுப்பு என்றால் புரிகிறது. அது என்ன இரண்டு அடுக்கு அமைப்பு?

புகழ்:  தமிழ் மன்றம் என்பது ஒரு லாப நோக்கற்ற நிறுவன அமைப்பாகும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கொள்கை ரீதியான முடிவுகள் எடுத்து, நிறுவன வளர்ச்சிக்கான திட்டமிடல்களை நிர்வாக இயக்குனர்கள் செய்வார்கள். அதை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துவதற்கு முதன்மை அதிகாரிகள் தலைமையில் பல்வேறு துறையினர் பணியமர்த்தப்படுவார்கள். இரண்டு பொறுப்புகளுக்கும் வெவ்வேறு விதமான அனுபவம், ஆற்றல், திறமை கொண்டவர்கள் தேவை. தமிழ் மன்றத்திலும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிர்வாக இயக்குனர்களாக மன்றத்திற்கான நீண்டகால கொள்கைகள், திட்டங்கள் வகுப்பார்கள். நிர்வாக இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மை அதிகாரிகள் கலாச்சாரம், மருத்துவம், இளைஞர் நலம், மூத்த குடிமக்கள், அவசர உதவி, வேலைவாய்ப்பு, பெண்கள் மேம்பாடு, தமிழ் இலக்கியம், அறிவியல் என பல்வேறு துறைகளுக்கு பொறுப்பேற்று, அந்தந்த துறைகளுக்கான தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.

இந்த நடைமுறை மூலம் தன்னார்வத்துடன் செயல்பட முன்வரும் சக தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன்,  மன்ற அனுபவத்துடனான அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்கவும் வழி வகுக்கும். 

A1 தமிழ்: யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்வெட்டு, திருவள்ளுவர் சிலை என இரண்டு முக்கிய பணிகள் பற்றி உங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கான பணிகள் பற்றிக் கூறுங்களேன்.

புகழ் : தமிழ் மன்றத்தின் சட்ட வடிவின் படி, ஒவ்வொரு புதிய முயற்சிகளுக்கும் தனியாக ஒரு குழு அமைக்கப்படும். அந்த திட்டம் நிறைவேறும் வரையிலும் அந்தக் குழுவினரின் பதவிக்காலமும் நீடிக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்வெட்டு என்னுடைய சிந்தனையில் உதித்த ஒன்றாகும்.  ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட சான் ப்ரான்சிஸ்கோ நகரில்,  கணியன் பூங்குன்றனாரின் இந்த வரிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வெட்டாக பதிப்பததற்கான் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு முதல் கோவிட் காலம் என்பதால்,  தொடர்புடைய பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பசிப்பிக் கடறகரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணியும் உடன் நடைபெற்று வருகிறது. தமிழ் மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில்  முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். விரைவில் இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிவிப்போம்.

A1 தமிழ்:உங்கள் அணியில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்?

புகழ் : நான் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறேன், ரூபன் மோகன் செயலாளர் பொறுப்புக்கும், கார்க்கி குமரேசன் பொருளாளர் பொறுப்புக்கும்,  பாலாஜி இராமகிருட்டிணன் துணைத்தலைவர் - நிர்வாகம், நித்யா ரகு துணைத்தலைவர்- கலாச்சாரம், சித்தார்த் சண்முகம் அமைப்பாளர் பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறார்கள். ஒத்த சிந்தனையுடன் அனைவரையும் அரவணைக்கும் தன்மை, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை ஆகிய பண்புகளை முன்னிறுத்தி உறுப்பினர்களின் ஆதரவை கோருகிறோம். சான் ப்ரான்சிஸ்கோ வளைகுடா  தமிழ் மன்றத்தின் வருங்காலம் குறித்த மாபெரும் தமிழ் கனவு எங்களுக்கு உள்ளது! அதற்கான செயல்வடிவமும் உள்ளது!

A1 தமிழ்: அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தமிழ் மன்றத்திற்காகவும் உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

புகழ் : வாழ்த்துகளுக்கு நன்றி.

From around the web