இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது... ராணி 2-ம் எலிசபெத் மகிழ்ச்சி!

 
Harry-Megan

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த இந்த தம்பதி தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் ஆர்ச்சி என்கிற மகன் இருக்கிறான்.

இந்நிலையில் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மற்றும் ஹாரியின் தாயும் இளவரசியுமான மறைந்த டயானாவின் நினைவாக லில்லிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் லில்லிபெட் என்பது ராணி 2-ம் எலிசபெத்தின் சிறுவயது செல்ல பெயராகும்.

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறந்த செய்தியை அறிந்து ராணி 2-ம் எலிசபெத் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பக்கிங்காம் அரண்மனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் ஹாரியின் சகோதரரும் இளவரசருமான வில்லியம் மற்றும் அவரது மனைவி கதே ஆகியோர் ஹாரி-மேகன் தம்பதிக்கு ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் ட்விட்டர் வாயிலாக தனது வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

From around the web