அரசுப் பள்ளிகளில் Pre K.G,  இலவசமாக 2 ஆண்டு பட்டயப்படிப்பு! அதிபர் பைடனின் அதிரடித் திட்டம்!!

 
அரசுப் பள்ளிகளில் Pre K.G, இலவசமாக 2 ஆண்டு பட்டயப்படிப்பு! அதிபர் பைடனின் அதிரடித் திட்டம்!!

நாடு தழுவிய அளவில், அமெரிக்க அரசுப் பள்ளிகளில் Pre.K.G மற்றும் 2 ஆண்டு இலவச பட்டயப்படிப்புக்கு அதிபர் அதிபர் திட்டம் தீட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில் KinderGarten முதல் 12வது வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  KinderGarten வகுப்பில் சேர்ப்பதற்கு குறைந்தபட்ச வயது 5 ஆக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான மாநிலங்களின் விதியாகும். சில மாநிலங்களில் 4 வயது 6 மாதங்கள் நிரம்பிய சிறார்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் 5 வயது நிரம்பும் வரையிலும் மாண்டசெரி எனப்படும் பள்ளி முன் வகுப்புகளுக்கும், குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்புகிறார்கள். தனியார்களால் நடத்தப்படும் இந்த மாண்டசரி மற்றும் காப்பகங்களுக்கு பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், குழந்தைகளின் கல்வித்திறனை முன்கூட்டியே வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் Pre Kindergarten வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று அதிபர் பைடன் திட்டவரைவு தீட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி இரு கட்சியினரின் ஆதரவை கோர உள்ளார்.

4 வயது முதல் 18 வயது வரையிலும் அரசுப் பள்ளிகளில் கட்டாயக் கல்விக்கு இந்த திட்டம் வழிவகுக்கும். மேலும் 12வது வகுப்பு படித்தால் இந்தக் காலத்திற்கு தேவையான வேலைத்திறன் கிடைப்பதில்லை என்பதால் அதற்கு மேலும் வேலைத் திறன் சார்ந்த இலவசக்கல்விக்கும் திட்டம் தீட்ட வேண்டும் என்று அதிபர் பைடன் விரும்புகிறார். தற்போது அமெரிக்கா முழுவதும், மாநில அரசுகள் நடத்தும் கம்யூனிட்டி கல்லூரிகளில், பல்வேறு பிரிவுகளில் 2 ஆண்டு பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு கட்டணம் மிகவும் குறைவாகும்.

இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு முடித்து விட்டு,  அடுத்த இரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப்படிப்பையும் நிறைவு செய்யலாம். இரண்டு ஆண்டு பல்கலைக்கழக செலவை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு ஆண்டுகள் கம்யூனிட்டி கல்லூரியில் படித்து விட்டு பல்கலைக்கழகத்தில் தொடரும் மாணவர்களும் உண்டு. இந்நிலையில், இந்த இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோர உள்ளார் அதிபர் பைடன்.

கல்வித்துறையில் இந்த இரண்டு முக்கிய முடிவுகள், அமெரிக்காவில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு இலவசம் ஆகும் போது பட்டயப்படிப்பு மட்டுமல்லாமல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் இந்த கல்விக்கொள்கை முக்கிய பங்காற்றும். உள் நாட்டவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அதிபர் பைடன் கையிலெடுத்துள்ளார் என்று கருதப்படுகிறது.

From around the web