அமெரிக்க தபால் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் பெயர்..!

 
Sandeep-Dhaliwal

அமெரிக்காவில், வன்முறைக்கு பலியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் நினைவாக, தபால் நிலையத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், ஹாரிஸ் பகுதியின் துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சந்தீப் சிங் (வயது 42). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2019ல் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான ஒரு காரை மடக்கினார். அப்போது, காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் சந்தீப் சிங் உயிரிழந்தார்.

Sandeep-Dhaliwal

டெக்சாஸ் மாகாணத்தில் முதன் முதலாக, சீக்கியர்களின் பாரம்பரியமான டர்பன் மற்றும் தாடியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டவர் சந்தீப் சிங். கடமை தவறாத, நேர்மையான அதிகாரியான சந்தீப் சிங்கின் சேவையை கௌரவிக்கும் வகையில், மேற்கு ஹூஸ்டன் நகரின் ஹாரிஸ் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Sandeep-Dhaliwal

இதற்கான விழா நேற்று நடந்தது. இதில், சந்தீப் சிங் பெயரை தபால் நிலையத்திற்கு சூட்டுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய எம்பி லிசி பிளட்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sandeep-Dhaliwal

இவ்விழாவில் சந்தீப் சிங்கின் தந்தை பியாரா சிங் தலிவால் பேசும்போது, “வன்முறையால் மகனை இழந்த எனக்கு அன்பும் ஆதரவும் காட்டி வரும் இப்பகுதி மக்களுக்கு நன்றி. தபால் நிலையத்திற்கு என் மகன் பெயர் சூட்டப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன்” என்றார்.

From around the web