நான் கூறியது சரியே என தற்போது அனைவரும் கூறத்தொடங்கியுள்ளனர்... முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்

 
Trump

சீனாவில் இருந்து கொரோனா பரவியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினாலும் சீனா இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கட்டுப்படுத்த உலக நாடுகள் படாத பாடு பட்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவும் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதும் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். சீன வைரஸ் என்றும் டிரம்ப் கடுமையாக சாடினார். சீனாவில் இருந்து கொரோனா பரவியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினாலும் சீனா இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.  

இதற்கிடையே, அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின்படி, உகானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள் என தங்கள் உளவுத்துறைக்கு  தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து நான் முன்பே கூறியது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பதாவது,  

சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என டிரம்ப் கூறியது சரியே  என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர். கொரோனா  வைரஸ் மூலம் உலகுக்கு ஏற்படுத்திய பேரழிவுக்காக அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு சீனா 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.

From around the web