எத்தியோப்பியா பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் பிரதமர் அபி அகமது!

 
Abiy-Ahmed

எத்தியோப்பியா பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் அபி அகமது மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்த திட்டமிட்டிருந்த பொதுத்தேர்தல் கொரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் எத்தியோபியா ராணுவத்துக்கும் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான உள்நாட்டு போர் கடந்த மாதம் தீவிரமடைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த டிக்ரே மாகாணத்தின் மிகேலி நகரை கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து இருதரப்பு மோதல் மேலும் வலுப்பெற்றது. இந்த மோதல் காரணமாக அந்த மாகாணத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தில் தவிப்பதாக ஐ.நா. தெரிவித்தது.

இதனிடையே உள்நாட்டு போர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி கடந்த மாதம் 21-ந் தேதி எத்தியோப்பியாவில் பொதுத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் நோபல் பரிசு பெற்ற தற்போதைய பிரதமர் அபி அகமது தலைமையிலான ஆளும் செழிப்பு கட்சிக்கும், அம்ஹாரா தேசிய இயக்கம் என்கிற முக்கிய எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்நிலையில் பொதுத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பிரதமர் அபி அகமது தலைமையிலான ஆளும் செழிப்பு கட்சி மொத்தமுள்ள 436 இடங்களில் 410 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் அபி அகமது தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார்.

From around the web