தமிழ் எழுதும் அன்பர்களே! இது குறித்தும் சிந்திப்போமா? 

 
தமிழ் வேண்டும்…

தமிழ் எழுதும் அன்பர்களே! 

கவிதை எழுதுங்கள் 
நிறைய எழுதுங்கள் 
தவறில்லை. மிகவும் நல்லது. 
தாய்த் தமிழை நாம் எழுத வேண்டும். 
கட்டாயம் எழுத வேண்டும். 
நித்தம் எழுத வேண்டும். 
தவம் போல அதைக் கருதி எழுத வேண்டும். 

ஆனால் நீங்களே உங்கள் பெயர்கள் முன்னால் “கவிஞர்” என்றோ அல்லது கவிஞர் சார்ந்த பட்டங்களோ போட்டுக் கொண்டு வலைதளங்களில் உலா வருவது தான் ஏன் என்று எனக்கு 
புரியவில்லை. 

உங்கள் 
எழுத்து நடை  
சிந்தனைகள் உயரம் 
சமூக அக்கறை 
வாசிப்பு ஆழம் 
மொழி வளம் 
இலக்கணப் பயிற்சி 
இலக்கிய அறிவு 
படைப்பின் நோக்கம் 
தனித்துவம் 
அகம் 

ஈதெல்லாமும், இன்னமும் உங்கள் படைப்புகள் சொல்லும் இல்லையா? வெறும் இலக்கணம் தெரிந்தால் கூட போதாதே. எல்லா கூறுகளிலும் வளமை வேண்டுமே. 

அப்படியிருக்க

கவிஞர் 
பாவலர் 
நாவலர் 
கவிக்கோ 
புலவர் 
பூமணி 
பாமணி 
கவி 

இப்படியெல்லாம் தங்களின் பெயர்கள் முன்னால்  போட்டுக்கொண்டிருக்கும் மக்களின் முகநூல் பக்கங்கள் போய், படைப்புகளை வாசித்தால் சீ என ஆகிறது. 

இதில் 
விருதுகள் வாங்குதலும், வழங்குதலும் 
விழாக்கள் எடுப்பதும் 
பொன்னாடை மாற்றி மாற்றி போர்த்திக் கொள்வதும் 
மாலை, மரியாதை, மேளங்களும், தாளங்களும் 
பட்டங்களும், சன்றிதழ்களும் 

இதையெல்லாம் பார்த்தால் 

இவை தமிழ் வைத்து 

பணம் பார்க்கும் வேலையா ?
இல்லை 
சுய தம்பட்ட சேவையா ?

என எண்ணாமல் இருக்க இயலவில்லை.  

விதிமுறைகளுடன் அரசாங்கம் நிர்ணயிக்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, முனைவர் போன்ற பட்டங்களை படித்து, உழைத்து, வாங்காமல் முகநூலில் முனைவர் பட்டம், புலவர் பட்டமெல்லாம் வாங்குவதும் வழங்குவதும்.. சரியா? அது முறையா? 

முறைப்படி கல்லூரியில் கற்றால் தான் ஒருவருக்கு தமிழ் ஞானம் இருக்கும் என்று பொருளில்லை. சிலர் பிறவி கவிஞர்கள். ஆனால் அவர்கள் தம் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ பட்டங்கள் தாமே போட்டுக்கொள்வதில்லை. 

எனக்கு தெரிந்து கல்லூரியில் தமிழ் கற்காத தமிழ் வளம் நிறைந்த சித்தர் போன்ற கவிஞர் சமகாலத்தில் உளர். ஆனால் அவர்கள் தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிக் கொள்வதில்லை. விருதுகள் தேடி அலைவதில்லை. கவியரசர் கண்ணதாசன் கூட தன்னை அன்பன் என்றே கையெழுத்திட்டு அடையாளப்படுத்துவாராம். 

“கவிஞர்” “புலவர்” “அறிஞர்” “கவிக்கோ” “பாவலர்” “மாமணி” இது போன்றவை வெறும் சொற்கள் அல்ல. அவை ஒரு ஒரு “பொறுப்பு” .இந்த வேறுபாட்டை உணர்வோமா? பிறரை காக்கா பிடித்து சான்றிதழ், விருதுகள் வாங்குவதற்கோ, பட்டங்கள் பெருவதற்கோ நம் மொழி வெளிப்பாட்டில் தரம் வேண்டாமா? 

மேலும் “கவிதை எழுதுதல்” என்றாலே 
பெண்கள் படங்கள் போட்டு 
காமம் கக்குவது, பாகம் வர்ணிப்பது 
அதற்கு அகப் பாடல்கள் எனத் தலைப்பு வைப்பது 
அல்ல அல்லவே! 
இப்படி எழுதுவதற்கு பெயர் “கவிதை படைத்தல்” 
அல்ல “பாலியல் குற்றம்” என்று பொருள். 

இது குறித்தும் சிந்திப்போமா? 

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web