தமிழக பாஜக தலைவர் ரஜினிகாந்த்?

சென்னை: டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்த அறிவிப்பு வந்தது முதல் தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி தான் ஊடகங்களில் பிரதானமானது. வழக்கம் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரையும் உள்ளே இழுத்து, லிஸ்டில் சேர்த்தார்கள் தமிழக ஊடகங்கள். இத்தகைய தருணங்களில் ஊடகங்கள் தங்கள் ஊகங்களை எழுதுவதும் பேசுவதும் வாடிக்கை தான். ஆனால், அவர்களுன் ஊகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னணியையும் ஆராய்ந்து எழுதுவார்கள், பேசுவார்கள். இங்கே தமிழிசை பதவி விலகிய
 

சென்னை: டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்த அறிவிப்பு வந்தது முதல் தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி தான் ஊடகங்களில் பிரதானமானது.

வழக்கம் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரையும் உள்ளே இழுத்து,  லிஸ்டில் சேர்த்தார்கள் தமிழக ஊடகங்கள். இத்தகைய தருணங்களில் ஊடகங்கள் தங்கள் ஊகங்களை எழுதுவதும் பேசுவதும் வாடிக்கை தான். ஆனால், அவர்களுன் ஊகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னணியையும் ஆராய்ந்து எழுதுவார்கள், பேசுவார்கள்.

இங்கே தமிழிசை பதவி விலகிய உடனேயே, ரஜினிகாந்த் அந்த இடத்தை நிரப்புவாரா என்ற வாதங்கள் எழுகின்றன. ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொல்லி விட்டார். ரஜினியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெரியும்.

அவர் அனாவசியமாக பொதுவெளியில் வாக்கு கொடுக்க மாட்டார். கொடுத்த வாக்கை இது வரையிலும் காப்பாற்றி வந்துள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த வரையிலும் இது நடந்து வந்துள்ளது.

தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று ஆணித்தரமாக சொல்லும்போது, சிந்திக்காமலா அப்படிச் சொல்லியிருப்பார்.  அப்போதும் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தது பாஜக தானே!. அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்னென்ன நிர்ப்பந்தங்கள் வரும் என்று தெரியாமலா அந்த அறிவிப்பு செய்திருப்பார்?

ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்தால், அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைவது உறுதி. ஆனால், அது ரஜினியின் லட்சியம் அல்லவே!. தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கவும், மக்களுக்கு நன்மையான தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றவும் தானே அரசியலில் இறங்குகிறார் ரஜினி. பாஜகவில் சேர்ந்தால் இவருடைய திட்டங்களை, பாஜகவினரே நிறைவேற்றி விடுவார்களா?. அந்தக் கட்சிக்கென்று தனிக் கொள்கைகள் இருக்கிறதல்லவா?

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது என்று வெளிப்படையாக சொன்னவர், அந்த எதிர்ப்பு அலையில் நீச்சலடிக்க வாலண்டியராக விரும்புவாரா?. மதவாதக் கட்சி என்ற அடையாளத்துடன் இருக்கும் பாஜகவில் சேர்ந்து தன்னை ஒரு மதவாதியாகக் காட்டிக் கொள்ளத்தான் விரும்புவாரா?

இன்றைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் ஒரே ஒருவர் ரஜினி தான். அவர் பாஜகவில் சேர்ந்து விட்டால்,  தமிழகத்தில் ஸ்டாலினுக்கு வெற்றி எளிதாகி விடாதா? அதைத் தான் ரஜினி விரும்புவாரா?.

44 ஆண்டுகால சொத்து

இதையெல்லாம் கடந்து, ரஜினி என்ற மனிதருக்கு யாருக்குமே இல்லாத தனிமனித செல்வாக்கு இருக்கிறது. கடந்த 44 ஆண்டுகாலமாக அவர் தமிழ்நாட்டில் சொந்த உழைப்பிலும், அவருடைய வெளிப்படையான அணுகுமுறையாலும் சேர்த்து வைத்துள்ள சொத்து அது. தமிழக பாஜக தலைவர் என்ற ஒற்றைப் பதவிக்காக அத்தனையும் தியாகம் செய்வாரா?

வி.பி.சிங் தலைமையில் நாடுதழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேசிய முன்னணி என்று ஒரு கூட்டணியை உருவாக்கினார்கள். ஒவ்வொரு கட்சியும் தனித்தனி சின்னத்தில் போட்டியிடுவதற்குப் பதிலாக ஒரே சின்னத்தில் தேசிய அளவில் போட்டியிடலாமே என்று தலைவர்கள் கருதினார்கள். திமுகவின் உதயசூரியன் சின்னம் எல்லோருக்கும் பிடித்துப் போய் விட்டது. 

திமுகவுக்கு தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான சின்னம் என்பதால், அதை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தால், தேசிய முன்னணிக்கு அந்த சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், கருணாநிதி சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். ஒரு வேளை தேசிய முன்னணியை நம்பி உதயசூரியனை ஒப்படைத்திருந்தால், மீண்டும் அந்த சின்னம் திமுகவுக்கு கிடைக்காமலும் போயிருக்கலாம்.

அதைப் போலவே,  தன்னுடைய தனிமனித உழைப்பினால் 44 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள “மக்கள் செல்வாக்கு” என்ற அரிய பொக்கிஷத்தை ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பதவிக்காக விட்டுக் கொடுக்க ரஜினிகாந்த் ஒன்றும் அறியாதாவர் அல்ல. கட்சியே ஆரம்பிக்காமல் அரசியலில் 25 ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்தவர்.

நரசிம்மராவ் முதல் மோடி வரையிலும் அத்தனை பிரதமர்களுடனும், கருணாநிதி, ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரையிலான முதல்வர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற இன்றைய ஒரே அரசியல்வாதி ரஜினிகாந்த் மட்டுமே!

தமிழக பாஜகவுக்கு வானதியோ, நாகேந்திரனோ, ராகவனோ அல்லது யாரோ ஒருவர் வருவார். நிச்சயமாக ரஜினி அல்ல! அடிப்படை அரசியல் தெரிந்த யாரும் சொல்லக்கூடியதும் இதுவே!

– ஆர்டிஎக்ஸ்.

From around the web