டிசம்பரிலாவது மழை கைகொடுக்குமா?

கார்த்திகைக்குப் பின் மழையில்லை என்பது தமிழர் தொன்மொழி. ஏதோ ஒருசில ஆண்டுகள் தவிர பெரும்பாலும் இந்த வாக்கு பொய்த்ததில்லை. இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை அளவுக்கு வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கவில்லை. கடந்த நவம்பர் 1- ம் தேதி கிட்டத்தட்ட 15 நாட்கள் தாமதமாகவே ஆரம்பித்தது வடகிழக்குப் பருவமழை. ஆனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை. அதே நேரம் கஜா
 

டிசம்பரிலாவது மழை கைகொடுக்குமா?
கார்த்திகைக்குப் பின் மழையில்லை என்பது தமிழர் தொன்மொழி. ஏதோ ஒருசில ஆண்டுகள் தவிர பெரும்பாலும் இந்த வாக்கு பொய்த்ததில்லை.

இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை அளவுக்கு வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கவில்லை. கடந்த நவம்பர் 1- ம் தேதி கிட்டத்தட்ட 15 நாட்கள் தாமதமாகவே ஆரம்பித்தது வடகிழக்குப் பருவமழை. ஆனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை. அதே நேரம் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சீர்குலைத்துவிட்டது. இதனால் பெய்த மழையால் எந்தப் பலனும் அந்த மாவட்டவிவசாயிகளுக்குக் கிட்டவில்லை. சொல்லப்போனால், தென் மேற்குப் பருவமழையால் கிட்டிய பலன்களை, இந்த கஜா புயல் காலி செய்துவிட்டது.

வட கிழக்குப் பருவமழைக் காலம் இன்னும் ஒருமாதம்தான் உள்ளது. டிசம்பர் மாதங்களில் சில தினங்கள்தான் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 15-க்குப் பிறகு பனிக்காலம் தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு டிசம்பரில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வந்தால் மட்டுமே வட தமிழகம், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாடின்றி கோடையைக் கடக்க முடியும். காரணம், இதுவரை பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் பெரும்பாலான ஏரிகள் பாதிக்கூட நிரம்பவில்லை.

டிசம்பரில் வங்கக் கடலில் சில காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவானால் மட்டுமே மழைக்கான வாய்ப்பு உள்ளது. இயற்கை மனது வைக்குமா?

– வணக்கம் இந்தியா

From around the web