கூலித் தொழிலாளியாக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையே இல்லையா?

இந்தியாவில் மார்ச் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை விட பட்டினிச் சாவு பற்றிய கவலையே மேலாக இருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? அன்றாடம் வேலை பார்த்து வயித்தை கழுவுவதற்காக பிறந்த மண்ணை விட்டு மொழி தெரியாத தொலை தூர மாநிலங்களிலும் குடும்பத்தோடு வந்திருப்பவர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்ற அச்சம், இந்திய மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்களுக்கு இயல்பாக எழுந்தது. ஆளும் மத்திய
 

கூலித் தொழிலாளியாக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையே இல்லையா?ந்தியாவில் மார்ச் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை விட பட்டினிச் சாவு பற்றிய கவலையே மேலாக இருந்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? அன்றாடம் வேலை பார்த்து வயித்தை கழுவுவதற்காக பிறந்த மண்ணை விட்டு மொழி தெரியாத தொலை தூர மாநிலங்களிலும் குடும்பத்தோடு வந்திருப்பவர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்ற அச்சம், இந்திய மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்களுக்கு இயல்பாக எழுந்தது.

ஆளும் மத்திய அரசோ, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வருகைக்கான ஏற்பாடுகளிலும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்த்து ஆட்சியைப் பிடிப்பதிலும் தான் கவனமாக இருந்தது. நமது அண்டைநாட்டில் டிசம்பர் மாதமே கொரோனா தொற்று ஏற்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. ஜனவரி 31ம் தேதி இந்தியாவின் தென்கோடியில் உள்ள கேரளாவுக்கும் வந்து விட்டது.

பிப்ரவரி 9ம் தேதி பாரதப் பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவை ஒழிப்பதற்கு சீனாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக அதில் கூறியுள்ளார். பிப்ரவரி 12ம் தேதி ராகுல் காந்தி, கொரோனா மிகப்பெரும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, பொருளாதாரப் பேரழிவு ஏற்படும், உடனடி நடவடிக்கை தேவை என்று எச்சரிக்கிறார்.

ஆட்சியை கவிழ்த்து மத்தியப் பிரதேசத்தில் அரியணை ஏறிய அடுத்த நாள் ஊரடங்கு உத்தரவு வருகிறது. சத்தியமாக இதில் எந்த அரசியலும் இல்லை என்று தான் நம்புகிறோம். ஆனால் பிப்ரவரி 9ம் தேதி சீனாவுக்கு உதவத் துடித்த அரசு, அதற்கு 10 நாட்கள் முன்னதாகவே தென்கோடி மாநிலத்திற்கும் வந்து விட்ட கொரோனாவை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள். எந்த அரசுக்கும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்கிய அவலம் அரங்கேறிய பிறகு தான், ரயில்கள், பஸ்கள் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது. சாலையில், ரயில் தண்டவாளத்திலும் பலியானவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே செல்கிறது.

இந்த அவலங்களை எல்லாம் பார்த்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள் என்றால், கோரத்தின் உக்கிரத்தை உணர்ந்து கொள்ளலாம். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

நாட்டின் உயர்நீதிமன்றமும் தமிழ்நாட்டின் உச்சநீதிமன்றமும் தலையிட்ட பிறகு கூட புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ஒரு சிலருக்குத் தெரியவில்லை போலும். 14 மணி நேர ஊரடங்கில் கொரோனா சமூகப் பரவல் ஏற்படுவது தடைபட்டு விடும் என்று சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு, ட்விட்டரால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஊரடங்கை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் அவருக்கு என்பதில் சந்தேகமில்லை.

பிரதமரின் அழைப்பை ஏற்று நாட்டின் ஒற்றுமையை வெளிக்காட்ட வீட்டிற்குள் மனைவியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீட்டிற்கு வெளியே வந்து கேட்டின் அருகே கம்பீரமாக அமெரிக்க சுதந்திராதேவி சிலை போல் மெழுகுவர்த்தி ஏந்திய கையை உயர்த்திப் பிடித்து நின்றதும், இந்திய தேசத்தின் மீதான பற்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் நற்செயல் தான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்ததைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில், புலம் பெயர்தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு நடந்து செல்லும் அவலம் நடைபெறுகிறது என்ற கதறல்கள் நாலாப்புறமும் கேட்கிறது. போயஸ் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு மட்டும் கேட்கவில்லை போலும். அரசை தட்டிக் கேட்க வேண்டாம்! கோரிக்கை எதுவும் வைக்க வேண்டாம்! குறைந்த பட்ச ஆறுதல் செய்தியாவது வெளியிடலாமே! இந்த கொரோனா காலத்தில் மறைந்த ஒரு இந்தி நடிகருக்காக ட்விட்டர் பக்கம் வந்தவர் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும் ஒரே ஒரு ட்வீட்டாவது செய்யலாமே!

கூலித் தொழிலாளியாக இருந்தேன் என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசியவரை, இன்று இந்தியாவின் தொழிலாளிகளின் அவலத்திற்காக ஆறுதல் சொல்லக்கூட தடுப்பது என்ன? தனக்கு முதலமைச்சர் ஆகும் எண்ணமே இல்லை என்றும் சொல்லி விட்டு எழுச்சியை எதிர்நோக்கியிருப்பவருக்கு, புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இரக்கமே இல்லையா? தொழிலாளர்கள் மீது அக்கறையில்லாத அந்த எழுச்சி வேறு யாருக்காக?

-மணி

A1TamilNews.com

From around the web