தமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா! பின்னணி என்ன?

நீண்ட நாட்களாக தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது முக்கியமான பிரகடனம் ஒன்றையும் சேர்த்தே கூறினார். ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளுக்குள் தன்னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தானாக பதவி விலகிவிடுவோம் என்ற அறிவிப்பு தான் அது. அன்றைய காலக் கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு எப்போது
 

தமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா! பின்னணி என்ன?நீண்ட நாட்களாக தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது முக்கியமான பிரகடனம் ஒன்றையும் சேர்த்தே கூறினார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளுக்குள் தன்னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தானாக பதவி விலகிவிடுவோம் என்ற அறிவிப்பு தான் அது. அன்றைய காலக் கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடும் என்ற நிலை இருந்தது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் ஆட்சியை எளிதாகப் பிடித்து விட முடியும் என்று பொதுவான நம்பிக்கை பரவலாக இருந்தது.

ரஜினிகாந்தின் இந்த அரசியல் அறிவிப்புக்கு 6 மாத காலத்திற்கு முன்னதாக ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அந்த காலக்கட்டத்தில், அவர் சந்தித்து விவாதித்த முக்கியமான அரசியல்வாதி தமிழருவி மணியன். அரசியலிலிருந்து முற்றிலும் விலகி இருந்த தமிழருவி மணியனை தேடிப் பிடித்து ரஜினிகாந்த் சந்தித்த போது பலருடைய புருவங்களும் உயர்ந்தன.

அது வரையிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாகவே எதிர்த்து வந்தவர் தமிழருவி மணியன். ஆனால் ரஜினியை ஒரிரு தடவை சந்தித்த பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். என்னுடைய கேள்விகள் அனைத்தையும் கேட்டு விட்டேன். அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில்கள் ரஜினியிடம் சரளமாக வந்தது. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யனும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே கொண்ட நல்ல மனிதர். அவருடன் துணையாக நிற்பேன் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

அன்று முதல் ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வரவேண்டும். அதனால் தமிழக அரசியல் எப்படி மேன்மை அடையும் என்று ரஜினிகாந்தின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டார் தமிழருவி மணியன். அப்போது ரஜினிகாந்த் மீது பாஜக சாயம் பூசப்படவில்லை. தூத்துக்குடிக்கு சென்று வந்த பேட்டிக்குப் பிறகு தான் மெல்ல மெல்ல காவிச் சாயம் ரஜினி மீது பூசப் பட்டது.

பாஜகவுடன் ரஜினி செல்லமாட்டார் என்று தான் தமிழருவி மணியனும் பேசி வந்தார். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் நிலைமை சற்று மாறத் தொடங்கியது. “You Made It” – நீங்கள் சாதித்து விட்டீர்கள் என்று பிரதமர் மோடியை வாழ்த்தி ட்வீட் செய்தாலும், உள்ளுக்குள் ரஜினி இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லையோ என்றே தோன்றுகிறது. அதன் பிறகு ரஜினியின் பேச்சில் பாஜக அரசின் சாயல் சற்று கூடுதலாகவே தெரிய ஆரம்பித்தது.

பிரதமர் மோடியை நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி வரிசையில் ஒப்பிட்டதாகட்டும், மோடியையும் அமித்ஷாவையும் அர்ஜூனன் – கிருஷ்ணன் என்று கூறியதாகட்டும், பாஜக பக்கம் ஆதரவாக ரஜினி நிற்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியை சந்திப்பதும் அதிகமாகத் தென்பட்டது. தொடர்ந்து துக்ளக் விழா சர்ச்சை, குடியுரிமைச் சட்ட ஆதரவு என முழுமையாக பாஜக தரப்பாக ரஜினி காணப்பட்டார்.

இந்தப் பின்னணியில் ஹெச் ராஜா தமிழருவி மணியனைப் பற்றி கூறிய கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினிக்கும் ஹெச் ராஜாவுக்கும் எந்த நட்பும் கிடையாது. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா சொன்ன போது அது காண்டுமிராண்டித்தனம் என்று கண்டித்தவர் தான் ரஜினி.

ஆனால் இன்றைக்கு, “ரஜினியைப் பற்றி பேச தமிழருவி மணியனுக்கு என்ன அருகதை இருக்கிறது,” என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்புகிறார். ரஜினிக்காக பேசுவதற்கு தமிழருவி மணியனுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்றும் கேட்கிறார். இதெல்லாம் ரஜினியை மெல்ல மெல்ல பாஜக வளையத்திற்குள் முழுமையாக இழுக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அவர்களின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கக்கூடிய ஒரே நபர் தமிழருவி மணியன் தான்.

தமிழருவி மணியனைப் பொறுத்தவரை, தமிழ்நாடு காமராஜர் காலம் போல் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு திரும்ப வேண்டும். பொது வாழ்க்கையில் தூய்மை வேண்டும். இதற்கு ரஜினிகாந்த் சரியானவராக இருப்பார் என்பது மட்டுமே. பாஜகவை இணைத்து ஒரு கூட்டணி அமைத்திருந்தாலும், பாஜக சித்தாந்தங்களுக்கு உடன்படாதவர் தான் தமிழருவி மணியன்.

அதனால் தான் அவரை ரஜினியிடமிருந்து பிரிக்கத் துடிக்கின்றனர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர். இதையெல்லாம் கண்டும் காணாமல் ரஜினி இருப்பதற்கான காரணம் தேர்தல் வரையிலும், அரசியல் களத்தில் முக்கிய எதிரியான திமுகவுக்கு எதிரானவர்களுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும் ராஜ தந்திரம் தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தனிப்பெரும் சக்தியாக இன்னொரு ஜெயலலிதாவாக தமிழ்நாட்டு நலன்களுக்காகவே செயல்படுவார் என்று அடித்துக் கூறுகின்றனர் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.  மூப்பனார், விஜயகாந்த், வாஜ்பாய் மற்றும் சோனியா காந்தியையும் எப்படி ஜெயலலிதா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரோ அதே பாணி தான் ரஜினி பாணியும் என்கிறார்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் ஹெச்.ராஜாவின் பாட்சா இந்த பாட்ஷாவிடம் பலிக்குமா?

– மணி

https://www.A1TamilNews.com

From around the web