நாடார் வரலாறு கருப்பா? காவியா? – அப்படி என்ன தான் இருக்கு இந்த புத்தகத்தில்!

மதுரை: சமீபத்தில் வெளிவந்த நாடார் வரலாறு கருப்பா? காவியா ? என்ற புத்தக வெளியீட்டை மதுரை தமிழ்ச்சங்கத்தில் நடத்தக்கூடாது என்று அரசு தடை விதித்ததும், பின்னர் மதுரை நீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டதும் பரபரப்பு ஏற்படுத்தியது. புத்தக வெளியீட்டன்று காலையில் மீண்டும் ஒரு வழக்கைப் போட்டு, அதிலும் சாதகமாக தீர்ப்பு வர மாலையில் விழா நடைபெற்றது. பேராசிரியர் அ.மார்க்ஸ், சுப.உதயகுமாரன், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழா தடைச் செய்தி காட்டுத்தீயாக பரவ 1000
 

மதுரை: சமீபத்தில் வெளிவந்த நாடார் வரலாறு கருப்பா? காவியா ? என்ற புத்தக வெளியீட்டை மதுரை தமிழ்ச்சங்கத்தில் நடத்தக்கூடாது என்று அரசு தடை விதித்ததும், பின்னர் மதுரை நீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டதும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
புத்தக வெளியீட்டன்று காலையில் மீண்டும் ஒரு வழக்கைப் போட்டு, அதிலும் சாதகமாக தீர்ப்பு வர மாலையில் விழா நடைபெற்றது. பேராசிரியர் அ.மார்க்ஸ், சுப.உதயகுமாரன், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.  விழா தடைச் செய்தி காட்டுத்தீயாக பரவ 1000 பிரதிகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளது. மூன்றே நாளில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ளார்கள். 
 
ஒரு புத்தக வெளியீட்டுக்கு அவசரமா தடை போடும் அளவிற்கு அதில் என்ன தான் இருக்கு என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்தது இயல்பானதே!. கமுதி ஆலய நுழைவு முயற்சி, சிவாகாசி வன்கொடுமை நிகழ்வு, கழுகுமலை கலவரம், மீனாட்சி அம்மன் ஆலய நுழைவு, சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம், தோள் சீலைப் போராட்டம், அய்யா வைகுண்டர், பெரியாரின் வைக்கம் போராட்டம், பட்டிவீரன் பட்டி டபுள்யூ.பி.ஏ சௌந்திரபாண்டியனார்,  சாதி ஆதிக்கத்தை உடைத்த யேசு சபையினர், காமராஜர் மீதான தாக்குதல்கள், மத்திய பாடத்திட்ட வழக்கு என கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் சம்பவங்களை தொகுத்துள்ளார், புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் லஜபதி ராய். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்.
 
கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “ கடவுள் மனிதர்களை சமமற்றவர்களாக கருதுகிறார். பறவைகள், விலங்குகளின் வகைகளைப் பிரித்தது போல் தனித்தனி வகை மனிதர்களை அவர் படைத்துள்ளார்,” போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்டு ஆலய மறுப்புக்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளதைப் பற்றி எழுதியுள்ளார். 
 
சிவகாசியில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தாலும் ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் அடைக்கலம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். நாடார்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
தோள்சீலை போராட்டம் பற்றி, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில், நாடார் சாதியைச் சார்ந்த பெண்கள் மார்பங்களை ஆடைகளால் மறைப்பதற்கு பிராமணர், வேளாளர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் குடங்களை இடுப்பில் சுமப்பது, தங்க ஆபரணங்கள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டன. பெண்கள் தாக்கப்பட்டார்கள். மேலாடைகள் கிழிக்கப்பட்டன.
 
அகஸ்தீஸ்வரத்தில் ஒரு சில நிலவுடமைக் குடும்பத்தினர், அரசரின் சிறப்புச் சலுகைகள் பெற்று நாடார் என்ற பட்டமும், குடும்பப் பெண்களின் மார்பகத்தை மறைக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர். தோள் சீலைப் போராட்டத்திற்கு எதிராகவும் ஆதிக்கச் சாதியினருக்கு ஆதரவாகவும் இந்த நிலவுடமைக் குடும்பத்தினர் இருந்தனர். 
 
கிறித்தவ மதத்திற்கு மாறிய பெண்களுக்கு மார்பகத்தை மறைக்கும் அனுமதியை, ஆங்கில அரசின் பிரதிநிதி கர்னல் மன்றோ 1812ம் ஆண்டு பெற்றுத் தந்தார். இந்துக்களின் வன்முறை காரணமாக பெரும்பாலானோர் கிறித்தவத மதத்தைத் தழுவினர்,” போன்ற  பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார்.
 
1978ம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்து கிறித்தவ  மோதல் பற்றிய நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கை பற்றியும் எழுதியுள்ள லஜபதி ராய், ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருந்த நிலவுடமை நாடார்கள் குடும்ப வழி வந்தவர்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணித் தலைவர் காலஞ்சென்ற தாணுலிங்க நாடார், எஸ்.டி.பாண்டியனார் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறூன்றிய வரலாறையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
நாடார்களுக்கு எதிராக இருந்த நிலவுடமை நாடார்கள் என்று ஒரு பக்கமும், ஆதிக்க சாதிகளின் வன்கொடுமை வன்முறைகளிலிருந்து காப்பாற்றியது கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் என்று மறுபக்கமும், பல்வேறு சம்பவங்களை ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், மற்றும் செய்திகளின் தமிழாகத்தையும் இணைப்புகளாகவும் லஜபதி ராய் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கடைசியில் 4 பக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள சாதிகளின் பட்டியலை எழுதி, ஏணிப்படியில் யார் மேல்படி, கீழ்படி என அடித்துக் கொள்ளும் தமிழக அரசின் பட்டியலில் கண்ட எல்லா சாதியினருக்கும் நாடார்களின் வரலாறு பொருந்தும் என்று முடிவுரை கூறியுள்ளார்.
 
தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு புத்தகம் வந்தால், வெளியீட்டை தடை செய்ய முயற்சிப்பதில் ஆச்சரியம் இல்லை தானே!.
 
– வணக்கம் இந்தியா

From around the web