வள்ளுவர் 2.0! அறிவின் தேவையைப் பேசிய அறவோன் பெரியார்!!

 
வள்ளுவர் 2.0! அறிவின் தேவையைப் பேசிய அறவோன் பெரியார்!!

திராவிடத்தால் வீழ்ந்தோம்! உடையுங்கள் அந்தச் சிலைகளை!

அவை வெறும் கற்சிலைகள்! அப்படியென்ன அந்தச் சிலைகள் செய்துவிட்டன?

அந்தக் கிழவனின் சிலைகளல்லவா அவை?

ஊரில் எத்தனையோ கிழவர்களின் சிலைகள் இருக்கின்றனவே! அந்தக் கிழவன்மேல் மட்டும் ஏன் இத்தனை வெறுப்பு!

திராவிடம் என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு, ஈராயிரம் ஆண்டு காலமாக கோலோச்சி வந்த வர்ணாசிரம தர்மத்தை, தான் வாழ்ந்த சொற்ப காலத்துக்குள் நொறுக்கிவிட்டல்லவா போயிருக்கிறான்? அந்த திராவிடத்தால் அல்லவா வீழ்ந்திருக்கிறோம்?

அந்தக் கிழவன் செத்து ஐம்பதாண்டுகள் ஆகப்போகிறதே? இன்னுமா வெறுப்பு?

இன்றும்கூட வருணாசிரம தர்மத்தைப் பற்றி தமிழ்நாட்டில் பேசமுடியவில்லையே? கேரளாவில்தானே கூட்டம்போட்டு பொமரேனியன், அல்சேஷன் நாய்களைப் பற்றியெல்லாம் சொல்லி விளக்கவேண்டியதாக இருக்கிறது?

இதுபோன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பும் அறியாமையும் ஒருபுறம் கொதித்துக் கொண்டிருக்க, சலனமே இல்லாமல் சிலையாக நிற்கும் அந்த முதியவரின் 140வது பிறந்தநாள் இன்று! அவர்தான் பெரியார்!

சூத்திரர் பட்டியலில் திராவிட சொல்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மனுசாத்திரத்தில், சூத்திரர்கள் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் “திராவிட” என்னும் சொல், பிற்காலத்தில் தென்னாட்டு மக்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாக மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. மக்கள் ஏறக்குறைய அதை மறந்துபோயிருந்தனர். 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தையும் நீதிக்கட்சியையும் இணைத்து அதற்கு “திராவிடர் கழகம்” என்று பெயரிட்டார் பெரியார். அதுதான் “திராவிடம்” என்ற சொல் அரசியலாக்கப்பட்டதன் தொடக்கப்புள்ளி!   இன்று, “திராவிடம்” என்பது ஒரு நூற்றாண்டின் அரசியல் வலிமை மிக்க மந்திரச் சொல்!

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்கிறது தொல்காப்பியத்தின் நூற்பா. நிறைமொழி என்பது “குறையுள்ள மொழி (சொல்)” என்பதன் எதிர்சொல். விருப்புவெறுப்புகள் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான சொல் நிறைமொழி. அறிவும் அன்பும் கலந்த சொல். “நிறைமொழி மாந்தர்” என்பவர்கள் அறிவின் வழி நடக்கும் அறவோர். அந்த அறவோர் மரபில் (ஆணையில்) முளைத்த நுட்பமான சொல்லையே (மறைமொழிதானே) மந்திரம் என்பார்கள் புலவர் பெருமக்கள்” என்பது இந்த நூற்பாவின் பொருள். 

இதையே, “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” என்கிறார் வள்ளுவர். அறவோரின் பெருமையை அந்த நிலத்தில் நிலைத்து நிற்கும் நுட்பமான சொற்களே காட்டிவிடும் என்பது வள்ளுவரின் கூற்று. 

அறம் என்றால் உணர்ச்சிக் கொந்தளிப்பை விடுத்து அறிவின் வழி நடத்தல்! அறிவோரின் சொல் பயனிலாச் சொல்லாக இருக்காது. அதனால்தான் தமிழ்மரபு அதை மன்+திரம்=மந்திரம் (என்றும் நிலைத்து நிற்கும் உறுதியான சொல்) என்கிறது.

அறவழி அறவோன் 

இவைபற்றிய தெளிவே இல்லாமல், அறம் என்பதன் முழுப்பொருளும் புரியாமலேயே, அறவழி நின்று சமூகத்தைப் புரட்டிப் போட்ட அறவோன் பெரியார்! அதனால்தான் அவரின் கருத்துகள் மந்திரங்களாய் இன்றும் தமிழரின் மரபணுவில் ஊறிக்கிடக்கின்றன. 

உலகில் தோன்றிய எல்லாத் தலைவர்களும் தான் சார்ந்த மண்ணின் நம்பிக்கைகளை பொதுவாழ்வில் எதிர்த்ததில்லை. நம்பிக்கைகளை எதிர்த்த அறிவியல் அறிஞர்கள் பொதுவாழ்வில் ஈடுபட்டதில்லை. தான் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்து நொறுக்கி, சமூகத்தைப் புரட்டிப் போட்டு, இன்றும் ஒரு மாபெரும் தலைவராக நிலைத்து நிற்கும் பெருமை கொண்ட ஒரே தலைவர் உலகளவில் பெரியார் மட்டும்தான்!

அவர் கேட்ட கேள்விகள் ஒன்றா இரண்டா? தமிழ், வடமொழி என்று பல நூல்களைப் படித்து, அவரளவுக்குப் புரிந்ததை கேள்வி கேட்டார். அதற்கு, மறுமொழியளிக்க முடியாமல் அறிஞர்களே திணறினார்கள் வரலாறு. கம்பனைக் கேள்வி கேட்டபோது மகிழ்ந்த அறிஞர்கள், பெரியார் சைவத் திருமுறைகளை புரட்டிப்போட்டபோது அலறினார்கள். வள்ளுவரையும் சேர்த்தே நார்போலக் கிழித்தபோது, அவரையாவது விட்டுவையுங்கள் என்று அலறினார்களே தவிர, பெரியாரின் கேள்விகளுக்கு மறுமொழியளிக்க முடியவில்லை!

கடவுளின் அவதாரம் இல்லை

பெரியார் கடவுளின் அவதாரம் என்றெல்லாம் சொல்லும்படி எதுவும் இல்லை! அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என்றுதான் “கடவுளை நம்புபவன் முட்டாள்” என்று தன் சிலைக்குக் கீழே எழுதி வைக்கச் சொன்னார். அவர் எல்லோரையும்போலப் பிறந்து வளர்ந்த ஒரு எளிமையான மனிதர். அதிகம் படித்தவருமல்ல! அவர் தொடக்கத்தில் ஆத்திகவாதி. தனது ஐம்பதாவது வயதுக்குப் பின்புதான் கடவுள் மறுப்பு என்ற கொள்கையைக் கையிலெடுத்தார். அந்த முடிவுக்கு அவர் வருவதற்கு ஆணிவேராக நின்றது சாதி மறுப்பு. சாதி மறுப்பின் வேர் சமத்துவம்! இவையெல்லாம், வள்ளுவரைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே பெரியாரால் எடுக்கப்பட்ட முடிவுகள். 

பெரியாரின் கொள்கைகளை இரண்டு குறட்பாக்களுக்குள் அடக்கலாம். ஒன்று “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”. இதன் பொருள் “பிறப்பு அனைவருக்கும் ஒரேமாதிரியானதுதான்; ஆனால், சிறப்பு என்பது செய்யும் செயல் அறிவார்ந்த அறச்செயலா, உணர்ச்சிபொங்கும் அறமற்ற செயலா, அறமற்றவை செய்துகொண்டு அறவோன் போல நடிக்கும் கயமையா அல்லது இவைபற்றி எந்த அறிவும் இல்லாத அறியாமையா (பேதைமையா) என்பதைப் பொறுத்தே அமைகிறது”

இன்னொன்று “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்”. இதன்பொருள் “பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டும் என்ற நிலை வருமாயின் உலகைப் படைத்தவன் கெட்டொழியட்டும்” என்பது.

இவற்றில் வரும் கடவுள் மறுப்பு ஊடாடும் சமத்துவக் கொள்கையின் நவீன வடிவம்தான் பெரியாரியம். அறம் மேம்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்! காலப்போக்கில் அதில் ஏற்பட்ட தொய்வு, வள்ளுவர் தொகுத்ததோடு நின்றுவிட்டது. வள்ளுவர் முதற்கொண்டு எவரும் பேசாத ஒரு பேசாப்பொருளை பெரியார் துணிந்து பேசினார். அதுதான் “பெண் விடுதலையின்றி சமூக நீதியில்லை” என்பது!

அவரின் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற தொகுப்பு, பெண்களுக்கானது அல்ல; ஆண்களுக்கானது! “பெண்மை நிமிர வேண்டுமானால், ஆண்மை செத்தொழிய வேண்டும்!” என்பதில் தன் வாழ்நாளிலேயே வெற்றிகண்டவர் அவர். அதனால்தான் அவருக்கு பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்டத்தை அளித்தார்கள். பின்பு, அதுவே நிலைத்துப்போனது! 

பெரியார் அறிவின் தேவையைப் பற்றிப் பேசிய அறவோன்! நம்பிக்கை என்பது அவரவர் உரிமை என்றவர். நாத்திகரான அவர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியது இதன் அடிப்படையில்தான். ஆனால், வருணாசிரம தர்மக் கோட்பாட்டின்படி, “நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்; சமூகத்தின் ஒரு சாரார் சூத்திரர் என்னும் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை கேள்வி கேட்காமல் செய்யவேண்டும்” என்று கடவுளே சொல்வதாக ஒருசாரார் நம்பும் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கையை தயக்கமேயின்றி எதிர்த்தார்.

பெண்கள் தீட்டானவர்களா?

“பெண்கள் தீட்டானவர்கள்; அவர்கள் மாதச்சுழற்சியின்போது வீட்டிற்குள் நுழையக் கூடாது; அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது; மணமுறிவைப் பற்றி அவர்கள் கனவிலும் நினைக்கக் கூடாது!” என்பன போன்ற மூடத்தனத்தை தீவிரமாக எதிர்த்தார். இந்தச் சொற்களின் தாக்கம்தான் இன்றும் மந்திரங்களாக தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பின்னிப்பிணைந்து ஊறிக்கிடக்கின்றன.

பெரியார் வள்ளுவரைக் கிழித்தெறிந்ததுபோல, பெரியாரின் சில கூற்றுகளை அறிவார்ந்த நோக்கில் மறுக்கவும் முடியும். அப்படி அவர் வாழ்நாளில் யாரேனும் கேட்டிருந்தால் மெச்சியிருப்பார் பெரியார். அவர் நிறைமொழி மாந்தர்; இருபதாம் நூற்றாண்டின் அறவோன்; நம் காலத்தில் வாழ்ந்த “வள்ளுவர் 2.0”! 

காலம் கடந்தும் நிற்கும் வள்ளுவம்போல், தமிழுள்ளவரை பெரியாரும் நிற்பார். சிலைகளை உடைக்கலாம்; அறத்திற்கு அழிவில்லை! அறவோர்கள் சாவதில்லை!

இன்று அவரின் பிறந்தநாள்! கொட்டு முரசு கொட்டி கொண்டாட வேண்டியநாள்! 

வாழ்க, தமிழ்! வாழ்க, பெரியார்! வாழ்க, திராவிடம்!

– உதயபாஸ்கர் நாச்சிமுத்து, கலிஃபோர்னியா, யு.எஸ்.ஏ.

A1TamilNews.

From around the web