அமெரிக்க சுதந்திர போராட்டம்! நீண்ட நெடிய வரலாறு!!

அமெரிக்கா யாரிடம் அடிமையாக இருந்தது என யோசிக்கிறீர்களா? இந்தியாவைப் போலவே ஆங்கிலேயரிடம் தான். 244 வருடங்களுக்கு முன் அமெரிக்கா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னைத் தானே தனி நாடென அறிவித்த நாள், இன்று ஜுலை நான்காம் நாள், 2017; அமெரிக்காவின் சுதந்திர நாள். அமெரிக்கா என்றால் புதிய உலகம்(New World) என்று பொருள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு கால கட்டத்தில் வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். ஆயிரத்து அறுபதுகளில் அமெரிக்க மண்ணில் இங்கிலாந்திலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும்,
 

அமெரிக்க சுதந்திர போராட்டம்! நீண்ட நெடிய வரலாறு!!

அமெரிக்கா யாரிடம் அடிமையாக இருந்தது என யோசிக்கிறீர்களா? இந்தியாவைப் போலவே ஆங்கிலேயரிடம் தான்.

244 வருடங்களுக்கு முன் அமெரிக்கா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னைத் தானே தனி நாடென அறிவித்த நாள், இன்று ஜுலை நான்காம் நாள், 2017; அமெரிக்காவின் சுதந்திர நாள்.

அமெரிக்கா என்றால் புதிய உலகம்(New World) என்று பொருள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு கால கட்டத்தில் வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். ஆயிரத்து அறுபதுகளில் அமெரிக்க மண்ணில் இங்கிலாந்திலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும், பெர்ன்ச் நாட்டிலிருந்தும் மத உரிமைக்காகவும், பொருளாதாரத்திற்காகவும், புது வாழ்வு தேடி மக்கள் இங்கு புலம் பெயர்ந்தார்கள். அதற்கு முன்னால் அமெரிக்காவில், இந்தியர்கள் எனப்படும் பூர்வீக அமெரிக்கர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இயல்பிலும், பழக்க வழக்கங்களிலும் நம் இந்திய நாட்டு பழங்குடி மக்களைப் போன்றவர்.

இங்கிலாந்து மக்கள் புலம் பெயர்ந்த வரலாறு

1620 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், “மே மலர்” (May Flower) என்னும் முதற்கப்பல் இங்கிலாந்திலிருந்து, மதச் சுதந்திரம் நாடிய 102 பேரை சுமந்து கொண்டு அமெரிக்க மண்ணை நோக்கிப் புறப்பட்டது. ’மே மலர்’ உணவுப் பொருட்கள் சுமந்து செல்லும் ஒரு வணிகக் கப்பல் (cargo ship), பயணிகளுக்கான கப்பல் அல்ல. புதிய வாழ்க்கை நாடி வந்த பலர் பயணக் கடினங்களிலும், கடல் புயல்களிலும், நோய்களிலும் வழியிலேயே இறந்து விட்டனர்.

66 நாட்கள் கடின கடற்பயணத்திற்குப் பிறகு தற்போதைய மசசூசட்ஸ்-ல் (Massachusetts) உள்ள கேப் காட்(cape cod) எனும் இடத்தை ’மே மலர்’ வந்தடைந்தது. இந்த இடத்திற்கு பிளைமௌத் எனும் தங்களின் இங்கிலாந்து நாட்டின் நகர் பெயர் வைத்து முதல் காலனியை அமெரிக்காவில் ஆங்கிலேயர் அமைத்தனர். அவர்கள் கப்பலிலிருந்து முதல் அடி எடுத்த வைத்த கல் இன்னும் அந்த கடற்கரையில் வரலாற்று காட்சிப் பொருளாக உள்ளது.

இங்கிலாந்தின் ஆட்சி அமெரிக்காவில் தோன்றியது ஏன்?

மே மலர் கப்பலுக்கு அடுத்து, இங்கிலாந்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்க மண்ணிற்கு வரத் துவங்கினர். இவர்களது கப்பல் பயணச் செலவையும், உணவு, ஆடை, அடிப்படை செலவுகளையும், ஆரம்ப தொழில் முதலீட்டையும் இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்கள் பூர்த்தி செய்தன. ஆகையால் இவர்கள் அந்த நிறுவனங்களுக்கு வேலை செய்யும் தொழிலாளர்களாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

1607 ஆம் ஆண்டிலிருந்து 1776 ஆண்டு வரையிலும், இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்கள், வட அமெரிக்க மண்ணில் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் மொத்தம் 13 குடியேற்பு காலனிகளை (colonies) அமைத்து, அக்குடியேற்புகளை ஆங்கில அரசின் கீழ் கொண்டு வந்தன. புலம் பெயர்ந்த மக்கள் அமெரிக்காவிலிருந்து மீன், மிருகத் தோல், ரோமம், மற்றும் மரப் பலகைகளை, அரிசி மற்றும் புகையிலை போன்ற பொருட்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தனர்.

அப்போது அமெரிக்க மண்ணில் நாடோடிகளாக ஏற்கெனவே வாழ்ந்து வந்த பூர்வீக அமெரிக்கர்களுக்கும் புதிதாக வந்த ஆங்கிலேய மக்களுக்கும் முரண்பாடுகள் எழ ஆரம்பித்தன. பூர்வீக மக்களுடன், புலம் பெயர்ந்த ஆங்கிலேய மக்கள் போராட ஆயுதங்களும், ஏனைய பொருட்களும், ராணுவ பாதுகாப்பும் இங்கிலாந்து நாடு கொடுத்து உதவி வந்தது.

இப்படித்தான் அமெரிக்க மண்ணிற்கு புலம் பெயர்ந்த மக்கள், தாய் நாடான இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் அதன் உதவியில், அதன் சட்டதிட்டத்திற்கேற்ப 1600, 1700களில் வாழ்ந்து வந்தனர். முதலில் இந்த ஆட்சி முறை இரு தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைந்தது. ஆனால் 1754 முதல் 1763 முதல் இங்கிலாந்து, பிரெஞ்ச் நாட்டுடனும் ஏனைய நாடுகளுடனும் போரில் ஈடுபட்டதால் பெரிய கடனுக்குள்ளானது.

அமெரிக்காவுக்கு சுதந்திர தாகம் ஏன்?

இங்கிலாந்து அரசு அதன் பொருளாதாரத்திற்காக 1764இல் அமெரிக்க வாழ் காலனி மக்கள் மேல் புதுப்புது வரிகளை திணிக்க ஆரம்பித்தது. சர்க்கரைத் தயாரிக்கும் மொலேசிஸ் உட்பட பல வணிக பொருட்களுக்கு இறக்குமதி வரிகள் வசூலிக்க ஆரம்பித்தது.

அமெரிக்க மண்ணில் இருந்த இங்கிலாந்து ராணுவத்திற்கு தேவையான உணவு, வீடு உட்பட அனைத்து வசதிகளையும் காலனி மக்கள் செய்து தர வேண்டும் என சட்டம் போட்டது.

பின் 1765 தபால் முத்திரை (The stamp act) எனும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி எல்லா பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் காலனி மக்கள் இங்கிலாந்தின் தபால் முத்திரை கட்டாயம் வாங்கியாக வேண்டும்.

இதனால் காலனி மக்கள் கோபம் கொள்ள ஆரம்பித்தனர். ஆங்கிலேய சட்டங்களை எதிர்த்து புரட்சி செய்யத் துவங்கினர். முதல் புரட்சி ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனத்தின்(East India Company) தேயிலை இறக்குமதியை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புரட்சிகள் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை குறைக்கத் துவங்கியதால், ஆங்கிலேய அரசு கடுங்கோபம் கொண்டு வன்முறையில் இறங்கியது. முதலில் இங்கிலாந்து அரசு பாஸ்டன் துறைமுகத்தை மூடியது. பாஸ்டன் வணிகர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய இயலாமல் தவித்தனர்.

பின் காலனிகளின் சட்ட அதிகாரத்தையும், நீதி முறைகளையும் காலனி தலைவர்களிடமிருந்து ஆங்கிலேய அரசு தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தது.

சுதந்திரம் கிடைத்த வழிகள்..

இங்கிலாந்தின் அடக்கு முறைகளை எப்படி கையாள்வதென ஆலோசனைகள் 1774 இல், 12 காலனித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ’முதல் கண்ட காங்கிரஸ் (First continental congress )’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, ஒரு சந்திப்பை பிலடெல்பியா நகரில் நடத்தினர். இந்த சந்திப்பில் வெர்ஜீனியா காலனி கலந்து கொள்ளவில்லை.

சந்திப்பின் பின் இங்கிலாந்து அரசுக்கு மனு ஒன்றை அனுப்பினர். இங்கிலாந்து அரசோ காலனிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்கவில்லை. காலனி மக்களை வன்முறைகள் மூலம் அடக்கவே தொடர்ந்து முயற்சிகள் செய்தது.

இதனால் புலம் பெயர்ந்த காலனி மக்களும் வேறு வழியின்றி வன்முறை போராட்டத்திற்கு தயார் ஆனார்கள். சர்பத்தை சின்னமாகக் கொண்டு இங்கிலாந்தின் பொருட்களை புறக்கணித்தும், எழுத்தின் மூலமாகவும், வன்முறைகளிலிலும், இங்கிலாந்து அரசை எதிர்த்து போராடத் துவங்கினர். காலனி போராளிகள் பேட்ரியாட்ஸ்/ தேசபக்தர்கள் (patriots) என அழைக்கப்பட்டனர்.

அமெரிக்க காலனிகள் முறையாக ஒரு போர்ப்படையையும் அமைத்து ஜார்ஜ் வாஷிங்டனை படைத் தளபதியாக நியமித்து இங்கிலாந்துப் படையுடன் போரில் ஈடுபட்டனர்.

புரட்சிகளும் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கும் போது அமைதியை பாதுகாக்க மனு(The Olive Branch Petition) ஒன்றை காலனிகளின் ’இரண்டாம் அமெரிக்க கண்ட காங்கிரஸ்’, இங்கிலாந்து அரசுக்கு அனுப்பியது. அந்த மனுவின் எந்தக் கோரிக்கைகளையும் இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்கிலாந்தின் கொடுங்கோல் ஆட்சி அமெரிக்க மண்ணில் தொடர்ந்தது. இருந்தாலும் அமெரிக்க காலனிகளின் சிலர் இங்கிலாந்திற்கு விசுவாசமாக இருந்தனர். அதனால் காலனிகளின் அனைத்து மக்களின் ஆதரவை தேடும் வகையில், ஜனவரி 1776 இல் பகுத்தறிவு (common sense) எனும் 50 பக்க பிரசுரம் ஒன்றை தாமஸ் பெயின் என்பவர் காலெனி மக்களுக்கு வெளியிட்டார். இவருடைய சொற்களின் ஆழத்தாலும், வீரியத்தாலும் இங்கிலாந்து ஆட்சிக்கு ஆதரவு தந்த பலரும் அமெரிக்க சுதந்திர போராட்டத்தில் இணைய ஆரம்பித்தனர். சுமார் 500 ஆயிரத்திற்கும் மேலான பகுத்தறிவு பிரசுரம் விற்பனையானது.

அது வரையிலும் போராட்டத்தில் கலந்து கொள்ளாத வெர்ஜீனியா காலனியும், 1775 மே மாதம் இரண்டாம் கண்ட காங்கிரஸுடன் இணைந்து போராட ஆரம்பித்தது. போராட்டம் ஒரு புதிய வேகத்துடன் தொடர்ந்தது.

அமெரிக்க சுதந்திர தினம் ஜூலை 4

சுமார் ஒரு வருடம் போராடிய பிறகு, 13 அமெரிக்க காலனிகளும் ஒருங்கிணைந்து, ஜூன் 1776 இல், இங்கிலாந்து ஆட்சியிலிருந்து விலகி அமெரிக்கா எனும் தனி சுதந்திர நாடாக செயல்பட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையை எழுத தாமஸ் ஜெஃப்ர்சன் நியமிக்கப்பட்டார். இந்த சுதந்திர அறிக்கை ( Declaration of Independence) எழுதும் குழுமத்தில், ஜான் ஏடம்ஸ் மற்றும் பென்ஜமின் பிராங்க்ளின் ஆகியோரும் இருந்தனர்.

இந்த அறிக்கையின் முன்னுரை அடிப்படை மனித உரிமைகளை எவ்வாறு இங்கிலாந்து அரசு பறித்தது என்று விளக்கி, பின் ஏன் அமெரிக்க காலனிகள் தனி சுதந்திர நாடாக வேண்டும் என்ற காரணங்களை பட்டியலிட்டது. இந்த சுதந்திர அறிக்கை 1776 ஜூலை 2, இல், நிறைவு பெற்றாலும் 1776 ஜூலை நான்காம் நாளன்று அன்று தான் அனைவராலும் ஏற்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டு முழு அங்கீகாரம் பெற்று, 13 காலனிகளை ஐக்கியமாக கொண்ட அமெரிக்கா, இனி தனி நாடென உலகிற்கு அறிவித்தது.

இந்த சுதந்திர அறிக்கைக்கை வெளியிட்டு, இன்னும் 5 ஆண்டுகள் போராடிய பின்னர் தான் இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா முழு சுதந்திரம் பெற்றது. இருந்தாலும் 1776 ஜூலை நான்காம் நாளைத் தான் சுதந்திர நாளாக அமெரிக்க வரலாறு அறிவித்து, வருடா வருடம் அரசு விடுமுறையுடன், அமெரிக்கா, சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.

ஜூலை நான்காம் நாளில் அனைத்து அமெரிக்க மக்களும் பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கை காட்சிகள், அணிவகுப்புகள் நடத்தியும், சுட்ட இறைச்சி/ காய்கள்/சோளம் உட்பட பார்க்பெக்யு(Barbecue) விருந்துகள் செய்தும், பூங்காக்களுக்கு பிக்னிக் சென்றும் கொண்டாடுகிறார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர்கள் உட்பட்ட இந்தியர்களும் பெருமளவில் அமெரிக்க குடிமக்கள் ஆகிவிட்டனர்.

அனைத்து அமெரிக்க நாட்டு மக்களுக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

Happy July 4th to All Americans!

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

 

[ See image gallery at a1tamilnews.com]

From around the web