பாஜகவின் கோட்டை நொறுங்கியது… படுதோல்வியால் கலகலத்தது மோடி பிம்பம்!

டெல்லி: உத்தரப் பிரதேச இடைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட கோரக்பூர் தொகுதியை சமாஜ்வாடி கட்சி கைப்பற்றியது. மேலும் இரு மக்களவைத் தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்தி சமாஜ்வாடி மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் வென்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றியது. அதேவேகத்தில் கடந்த அண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா பெரும் வெற்றியைப் பெற்றது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.
 


டெல்லி: உத்தரப் பிரதேச இடைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட கோரக்பூர் தொகுதியை சமாஜ்வாடி கட்சி கைப்பற்றியது.

மேலும் இரு மக்களவைத் தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்தி சமாஜ்வாடி மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் வென்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றியது. அதேவேகத்தில் கடந்த அண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா பெரும் வெற்றியைப் பெற்றது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். துணை முதல்வர்களாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

யோகி ஆதித்யாநாத் மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பதவியேற்றனர். இதனால் அவர்களுடைய பாராளுமன்ற தொகுதிகளான கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகள் காலியாகின இந்த தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்வுசெய்ய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவை நாடே எதிர்நோக்கியது. கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இருதொகுதிகளிலும் பா.ஜனதா, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவியது. கோரக்பூர் தொகுதியில் 47.45 சதவித வாக்குகளும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவித வாக்குகளும் பதிவாகியது. குறைந்த அளவிலே வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இருதொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சமாஜ்வாடி முன்னிலை பெற்றது. ஆளும் பாரதிய ஜனதா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. புல்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து தன்வசப்படுத்தினார்.

யோகியின் கோட்டை நொறுங்கியது

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம் கோரக்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் யோகி ஆதித்யநாத். இப்போது அவர் முதல்வராக உள்ள நிலையில் அவருடைய தொகுதியில் பா.ஜனதா பின்னடைவு என்பது மோடிக்கே பெரும் அதிர்ச்சி.

காரணம், இத்தனை நாளும் பிரிந்து கிடந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியாக நின்றதுதான். காங்கிரஸ் கட்சி வேறு தனியாக களமிறங்கியது.

கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளார்கள் களம் இறங்கினாலும் பா.ஜனதாவின் உபேந்திர சுக்லா, காங்கிரஸ் கட்சியின் சுகிதா சட்டர்ஜீ காரீம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பிரவீன் நிஷாத் இடையேவே கடுமையான போட்டி நிலவியது.

இன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி தொடர்ந்து முன்னிலையை பெற்றது. யோகி ஆதித்யநாத் கோட்டையான கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பீகாரில்…

இடைத் தேர்தல் நடந்த மூன்றாவது மக்களவைத் தொகுதி பீகார் மாநிலத்தின் அரேரியா. பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

அரேரியா மக்களவைத் தொகுதியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சர்ஃபராஸ் ஆலம் 61988 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.

ஜகனாபாத் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் குமார் கிருஷ்ணா 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார்.

மற்றொரு தொகுதியான பஹாபூவாவில் பாஜக வேட்பாளர் ரிங்கி ராணி பாண்டே 15000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

மொத்தம் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4ல் எதிர்க்கட்சிகள் வென்று பாஜகவுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளன. பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் பெரும் மாற்றத்துக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

 

From around the web