‘நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன்’ – ஒட்டு மொத்த பெண்களின் ஆதரவை அள்ளும் கனிமொழி!

தூத்துக்குடி: கனிமொழி vs தமிழிசை போட்டியால், இந்தியா அளவில் முக்கியத்துவம் பெற்ற தூத்துக்குடி தொகுதியில் நிலவரம் என்ன? கனிமொழி கரை சேர்வாரா? அல்லது தூத்துக்குடி கடலில் தமிழிசையின் தாமரை மலருமா?. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்லாமல், தூத்துக்குடி பொதுமக்களின் கோபம் அதிமுக, பாஜக அரசுகள் மீது இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதனால் தான் என்னவோ, அதிமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள, கடந்த தேர்தலில் வென்ற தொகுதியான தூத்துக்குடியை பாஜக தலையில் கட்டி
 
தூத்துக்குடி: கனிமொழி vs தமிழிசை போட்டியால், இந்தியா அளவில் முக்கியத்துவம் பெற்ற தூத்துக்குடி தொகுதியில் நிலவரம் என்ன? கனிமொழி கரை சேர்வாரா? அல்லது தூத்துக்குடி கடலில் தமிழிசையின் தாமரை  மலருமா?.
 
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்லாமல்,  தூத்துக்குடி பொதுமக்களின் கோபம் அதிமுக, பாஜக அரசுகள் மீது இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதனால் தான் என்னவோ,  அதிமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள, கடந்த தேர்தலில் வென்ற தொகுதியான தூத்துக்குடியை பாஜக தலையில் கட்டி வைத்துள்ளார் எடப்பாடி என்பது தான் முதல் பேச்சாக இருந்தது.
 
கனிமொழிக்கு போட்டியாக யாரை நிறுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த போதே, தமிழிசையின் பெயர் பலமாக அடிபட்டது. வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார் கனிமொழி. கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த தமிழிசை பத்திரகாளி அம்மன் கோவில்களைச் சுற்றி வந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
இந்த வேறுபாடுகளே எதை நம்பி இருவரும் களத்தில்  இறங்கியுள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்தியது. ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழிசைக்கு ஆதரவாக பணத்தை செலவழிக்கிறார்கள் என்பது பொதுமக்களிடையே பேச்சாக உள்ளது. அதற்கு வலு சேர்ப்பது போல், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மென்னு முழுங்குகிறார் தமிழிசை.
 
வார்த்தை ஜாலம் என எண்ணி  “கற்ற பரம்பரை குற்ற பரம்பரை அல்ல”  என்று சொல்லப் போக, கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் உள்ள தேவர் இன மக்களுக்கு இன்ஸ்டண்ட் எதிரியாகிப் போனார் தமிழிசை. அவருடைய ஆவேசமான அரசியல் பேச்சுகளுக்கு கட்சிக்காரர்கள் மகிழ்ச்சி அடைகிறாரே ஒழிய மக்கள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
 
தூத்துக்குடிக்கு தனி தேர்தல் அறிக்கை என தடபுடலாக அறிவித்தார் தமிழிசை. அதில் சொல்லப்பட்ட இரண்டு வாக்குறுதிகள் அந்த அறிக்கையையே கேலிக்குரியதாக்கி விட்டது. புல்லட் ரயில், கப்பலில் சென்று மீன்பிடிப்பது என்ற இரண்டு வாக்குறுதிகளும், தமிழிசையின் ஒட்டு மொத்த தேர்தல் அறிக்கையை டேமேஜ் செய்து விட்டது. நடக்காததைச் சொல்லுகிறார். தூத்துக்குடிக்கு அடிப்படைத் தேவைகள் எவ்வளவோ இருக்க புல்லட் ரயில் என்று கலர்ப்படம் காட்டுகிறார் என்று சொல்லுகிறார்கள்.
 
தூத்துக்குடிக்கு சென்னையிலிருந்து கூடுதலாக ஒரு ரயில், மும்பைக்கு நேரடி ரயில் என்று வாக்குறுதி கொடுத்திருந்தால் ஒருவேளை மக்கள் அதை நம்பியிருக்கக் கூடும். எந்த நேரம் சென்றாலும் இடம் கிடைப்பது சிரமம் என்று முத்து நகர் எக்ஸ்பிரஸில் கூட்டம் அலைமோதும் போது, கூடுதல் ரயில் நிச்சயம் வரவேற்பு பெற்றிருக்கும். ஆனால் புல்லட் ரயில், இவர் ஜெயிக்கப் போறது இல்லைன்னு அள்ளி விடுகிறாரா என்ற ஏளனத்திற்குள்ளாக்கியுள்ளது.
 
மூன்றாவது வேட்பாளரான அமுமுக புவனேஸ்வரனுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அங்கு அதிமுக வாக்குகள் கணிசமாக பிரியும். மேலும் தேவர் இன மக்களின் ஆதரவும் டிடிவி தினகரனுக்கே கிடைக்கும். விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியிலும் அமுமுக போட்டியிடுவதால் அங்கும் அதிமுக வாக்குகளை அமுமுக பிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் முக்கியமான ஒரு தகவல் அதிமுக தொண்டர்களிடையே பரவி வருகிறது. நாளைக்கே டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்து விடக்கூடும். தூத்துக்குடி தொகுதியில் பாஜக காலூன்றி விட்டால் நமக்கே ஆபத்து. எனவே தொண்டர்கள் அமுமுகவுக்கு வாக்களிப்பது தான் நமக்கு நல்லது என்று ஒரு பேச்சு பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது தூத்துக்குடியிலேயே முகாமிட்டு பணத்தை தண்ணியாக செலவழித்துப் பணிகளைச் செய்தவர் டிடிவி தினகரன். மக்களின் அந்த விசுவாசமும் அமுமுகவுக்கு பலம் சேர்த்துள்ளது.
 
கனிமொழி தரப்பு நிதானமாக அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே தொகுதி முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் மூலம் அறிமுகமாகி விட்டார் கனிமொழி. அவருடைய அமைதியாகப் பேசும் அணுகுமுறைக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
கைகளைப் பிடித்துக் கொண்டு, “நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன்,” என்று கனிமொழி உறுதிமொழி கொடுக்கும் போது பெண்களும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். திமுக எம்.எல்.ஏவும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான கீதா ஜீவன் மீதே கூட குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைக்கிறார்கள். பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, உங்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். கனிமொழியின் எளிய அணுகுமுறையும், அமைதியாக பேசும் பாங்கும் பெரும் ப்ளஸ் பாயிண்டாக உருவெடுத்துள்ளது. கருணாநிதியின் மகள் இப்படியா என்று பெண்கள் ஆச்சரியப்படுகிறார்கள்
 
அதே சமயத்தில் தமிழிசையை ஆங்காங்கே காலை வாரும் வாய்ப்பையும் விடவில்லை கனிமொழி. மக்கள் மீது புல்லட்டை பாய வைத்து விட்டு, புல்லட் ரயில் விடப்போகிறார்களா? கப்பல் போகும் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறுத்தி விட்டு, கப்பலில் போய் மீன் பிடிப்பது எப்படி? என்று சமயம் பார்த்து கேள்விகளை எழுப்புகிறார்.
 
மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் திமுக தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் தேர்தல் பணியும் கனிமொழிக்கு பலம் ஆகும். 
 
இன்றைய நிலவரப்படி கனிமொழியின் வெற்றி உறுதியாகியுள்ளது. வாக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்கும் என்று தான் கேள்வி எழுந்துள்ளது. இரண்டாமிடம் அமுமுகவா , பாஜக என்பதுவும் சுவராஸ்யமான போட்டியாக உருவெடுத்துள்ளது.
 
– வணக்கம் இந்தியா 

From around the web