திருவள்ளுவர் தினம்!

தமிழ் மக்கள் தம் வாழ்வில் நித்தம் வாசித்து, இன்புற்று, சிந்தித்து, தாமும் கடைபிடித்து, பிறருக்கும் எடுத்துக் கூறி உயர்ந்து வாழ உதவும், தமிழ் இலக்கிய நூல் திருக்குறளாகும். இத்திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்கி, இரண்டு அடிகளில் உலகத் தத்துவங்கள் மொத்தமும் ‘திருக்குறள்’ என்னும் படைப்பில் நமக்கு கொடுத்துள்ளார் திருவள்ளுவர். திருவள்ளுவர் எங்கு, எப்போது, யாருக்கு பிறந்தார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், அவர் இயற்பெயர் என்ன, வாழ்ந்த
 

திருவள்ளுவர் தினம்!மிழ் மக்கள் தம் வாழ்வில் நித்தம் வாசித்து, இன்புற்று, சிந்தித்து, தாமும் கடைபிடித்து, பிறருக்கும் எடுத்துக் கூறி உயர்ந்து வாழ உதவும், தமிழ் இலக்கிய நூல் திருக்குறளாகும். இத்திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” என்று தொடங்கி, இரண்டு அடிகளில் உலகத் தத்துவங்கள் மொத்தமும் ‘திருக்குறள்’ என்னும் படைப்பில் நமக்கு கொடுத்துள்ளார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் எங்கு, எப்போது, யாருக்கு பிறந்தார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், அவர் இயற்பெயர் என்ன, வாழ்ந்த இடம் எது என்ற விவரங்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.

திருவள்ளுவருக்கு வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், மாதானுபங்கி, நாயனார், பொய்யில்புலவர், நான்முகனார், பொய்யாமொழிப் புலவர், தேவர், பெருநாவலர் என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு.

திருக்குறளுக்கு முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, வான்மறை, உலகப் பொதுமறை, என்ற வேறு பெயர்கள் உண்டு.

முப்பால் எனும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. திருக்குறளில் மொத்தம் 1330 இரண்டடி குறள்கள் உள்ளன. அவை 133 அதிகாரங்களின் கீழ், 10 குறள்கள் எனக் கொடுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

திருவள்ளுவர் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியாதுப் போயினும் அவர் இயற்றிய திருக்குறள் நன்னெறி நூல் இன்றும் உலகளாவில் கொண்டாடப்படுகின்றது.

திருக்குறள் சாதி, மதம், இனம், மொழிகளை கடந்து, வாழ்வியல் நெறிகளை உலகின் அனைத்து மக்களுக்கும் எடுத்து கூறுவதால் இதனை உலகப் பொதுமறை என்கிறோம்.

அன்பு, அறம், அகிம்சை, நீதி, நேர்மை, நல்லொழுக்கம், அரசியல், நட்பு, கல்வி, குடும்பம், இன்பம், இயற்கை என வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை, புரிந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை, வாழ்வியலை குறள் வெண்பாக்களில் நமக்கு திருக்குறளில் கொடுத்துள்ளார் வள்ளுவர்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று பாரதியாரால் வள்ளுவர் புகழப்படுகிறார்.

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என ஔவையார் திருக்குறளை கூறியுள்ளார்.

ஔவையார் மட்டுமல்ல திருவள்ளுவமாலை என்னும் நூலில் திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் சங்கப் புலவர்கள் பலரும் பாடியுள்ளனர்.

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று போற்றியுள்ளார் பாரதிதாசன்.

நமது பாரதத்தின் தந்தையெனப் போற்றப்படும் காந்தியடிகள் பிரஞ்சு மொழியில் திருக்குறளை படித்தப்பின் தான் தமிழ்ப் பயிலக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படிக்க வேண்டும் என்பதால் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டார் மட்டுமல்ல வெளி நாட்டு அறிஞர்களும் திருக்குறளை வாசித்து புகழாரம் சூட்டியுள்ளனர். இங்கிலாந்து பேரரசி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளை கொண்டிருந்தார்.

பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள, உலகப் புகழ் பெற்ற திருக்குறள், தமிழ் இலக்கியங்களிலேயே ஆகச்சிறந்த நூல் எனக் கருதப்படுகிறது. திருக்குறளால் உலக இலக்கிய அரங்கில் தமிழுக்கென ஒரு தனி இடம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இத்தகைய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஜனவரி 15 ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் நிகழ்வாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நாள் அரசு விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

பகுத்தறிவு சிந்தனைகள் கொண்டு, காலம் கடந்து, எல்லை கடந்து நிற்கும் திருக்குறளை நாம் தினம் வாசிப்பதும், அதன் வழி நடப்பதும், நம் அடுத்த சந்ததியற்கு எடுத்துச் செல்வதும், அதைக் கொடுத்த திருவள்ளுவரை நினைப்பதும் நம் கடமையாகும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.      –  குறள்

– புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web