சண்ட செய்யச் சொன்னீங்களே! இப்படிச் செய்யலாமா தலைவா? ரஜினி ரசிகர்களின் குமுறல்!!

 
சண்ட செய்யச் சொன்னீங்களே! இப்படிச் செய்யலாமா தலைவா? ரஜினி ரசிகர்களின் குமுறல்!!

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி “ நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்று ரஜினிகாந்த் அறிவித்த நாள் முதல், அவர்களுடைய ரசிகர்களின் முதல் எதிரியாகிப் போனார் மு.க.ஸ்டாலின். ரஜினிக்கு ஒரே போட்டி ஸ்டாலின் தான் என்பது தான் அன்றைய நிலையாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி இப்போவோ, அப்போவே என்று இருந்ததால், அதிமுகவினர் ஒட்டு மொத்தமாக ரஜினி பக்கம் வந்து விடுவார்கள் என்பதும் அப்பாவி ரசிகர்களின் கனவாக இருந்தது.

ஆதலால், மு.க.ஸ்டாலினை வசை பாடுவதிலேயே தங்கள் நேரத்தைச் செலவழித்தனர் ரசிக கண்மணிகள்.  முக்கியமான ரசிகராக அறியப்படும் ஒருவர் ஸ்டாலினின் பெயரை அவதூறாகப் பரப்புவதையே குறியாக வைத்து ரசிகர்கள் மத்தியில் ஸ்டாலின் என்று யாருமே சொல்வது கிடையாது. இப்படி ஸ்டாலின் எதிர்ப்பாகிப் போன கண்மணிகளுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்பட கண்ணில் பட்டவர்கள் எல்லாம் ஆதரவாளர்களாகிப் போனார்கள்.

இந்த சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். பாஜக நபர்கள் எல்லாம் ரஜினி ரசிகர்கள் என்று பட்டம் சூட்டிக்கொண்டு ஸ்டாலினை வசைபாடுவதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்கள். காலத்தின் கணக்கு வேறாக இருந்ததால், நான் முதலமைச்சர் ஆக மாட்டேன் என்று ரஜினி ஜகா வாங்கியதையும் கூட “பாருடா பதவி ஆசை இல்லாத என் தலைவனை!” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூவினார்கள். ஆனால் ரஜினிக்கோ, மாறிவிட்ட அரசியல் சூழலும் புரிந்தது. இந்தக் கண்மணிகளை நம்பி களம் இறங்கினால் வடிவேலு போல் மார்க்கெட் போய்விடும் என்றும் தெரிந்ததால், அரசியலை நைசாக கை கழுவினார். கொரோனா பேரிடர் பெரும் சாக்காக வந்தது. அதைக் கூட “என் தலைவன் கடவுள்” என்று புகழ் பாடும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் கண்மணிகள்.

எல்லாத்துக்கும் க்ளைமாக்ஸாக வந்தது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். பாஜக, எடப்பாடி கூட்டணி எப்படியாவது ஸ்டாலினை வெல்ல விடாமல் தடுத்துவிடுவார்கள் என்று நம்பினார்கள் கண்மணிகள். ஆனால், அவர் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டார். சூப்பர் ஸ்டாரோ வழக்கம் போல் என் அன்பு நண்பருக்கு வாழ்த்து என்று நீண்டதொரு மடல் வரைந்து விட்டார். இது தான் கண்மணிகளுக்கு இப்போ பிரச்சனை ஆகிவிட்டது.

சண்ட செய்யச் சொல்லிட்டு இப்படி பண்றீங்களே தலைவா?ன்னு அங்கலாய்க்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று அவரைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்காக எல்லோரையும் எதிரியாக்கினோமே என்று மருகிறார்கள். 

எல்லாம் சரி, ரஜினி என்னைக்காவது உங்களிடம் இப்படி எல்லோரையும் எதிரி ஆக்குங்கள் என்று சொன்னாரா? மாற்று அரசியல் என்று தானே சொல்லி வந்தார். நீங்கள்ல்லாம் பழைய ஜெயலலிதா - கருணாநிதி பகை போல் நடந்து கொண்டால் யாருப்பா பொறுப்பு.

புதிய முதலமைச்சருக்கு பதவி விலகும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்கிறார். அவரோ, உங்கள் ஆலோசனையும் கட்டாயம் வேண்டும் என்கிறார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் காணாத வரவேற்க்கத்தக்க காட்சிகள் இவை. பழைய அமைச்சர்களுமு புதிய முதலமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். தமிழ்நாடு புதியதொரு அரசியல் நடைமுறையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

நீங்க என்னடான்னா எல்லோரையும் எப்போதும் வாழ்த்தும் ரஜினியையே கேள்வி கேட்கிறீர்கள். இனியாவது ரஜினி ரசிகர்களாக இல்லாமல் ரஜினியாகவே மாறுங்கப்பா!

- மணி

From around the web