உள்ளாட்சி வரலாற்றில் உலக சாதனை: குடும்பத்தில் 5 பேர்; கிடைத்தது ஒரு ஓட்டு..!

 
Karthik-BJP

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் குடும்பத்தில் 5 பேர் இருந்தும் அவருக்கு ஒரே ஒரு ஓட்டு விழுந்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

9வது வார்டில் மொத்தம் 1,551 ஓட்டுகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 ஓட்டுகள் பதிவாகின. இன்று (அக். 12) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அருள்ராஜ் 387 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 ஓட்டுகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 ஓட்டுகளும், பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு ஓட்டும் பெற்றிருந்தனர். 3 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். அத்துடன், அவருடைய குடும்பத்தில், அவர் உட்பட 6 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கார்த்திக்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடைய கட்சியினர்  வாக்களித்திருந்தாலே இதைவிட அதிக ஓட்டுகள் பெற்றிருக்க முடியும்; ஆனால், குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை” என்று, திமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், “எனது குடும்பத்தினருக்கு 4வது வார்டில் தான் ஓட்டு உள்ளது. அதனால் அவர்கள் ஓட்டுப் போடவில்லை. இந்தத் தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது” என, கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

From around the web