கை நீட்டிய பெண் விஏஓ கைது: கணக்கில் வராத ரூ.12 லட்சம் பறிமுதல்..!

 
VAO

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அரிகிருஷ்ணன் (வயது 49). இவர், தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய காட்டுக்கூடலூர் விஏஓ அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவை பெற்ற விஏஓ செண்பகவல்லி (வயது 38), பட்டா மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அரிகிருஷ்ணன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒரு கவரில் ரூ. 8 ஆயிரம் வைத்து, விஓவிடம் கொடுக்கச் சொல்லி அரிகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.

அதன்படி, காட்டுக்கூடலூர் அலுவலகத்தில் விஏஓ செண்பகவல்லியை சந்தித்த அரிகிருஷ்ணன், அவரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜா மெல்வின்சிங் தலைமையிலான போலீசார், விஏஒவை கைது செய்து கடலூர் ஒழிப்பு அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றனர்.

இதையடுத்து, பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தில் உள்ள விஏஓ செண்பகவல்லி வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி, அங்கு இருந்த 12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது குறித்து செண்பகவல்லியிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

From around the web