தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் வெளியாகுமா...?

 
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் வெளியாகுமா...?

தமிழகத்தில் கொரனா பரவலைத் தடுக்க ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 20ஆம் நாளில் இருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.அதைத் தவிர ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலாளர், அரசின் ஆலோசகர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடைபெற்றது.

அப்போது கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இரவு ஊரடங்கு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கோவில் வழிபாட்டு நேரம், கடைகள் திறந்திருக்கும் நேரம் ஆகியவற்றைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறிச் சந்தைகள், பழச்சந்தைகளைத் திறந்தவெளியில் உள்ள திடல்களில் அமைப்பது பற்றி அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இரவு 8 மணியுடன் கடைகளை மூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூடுவதற்கு அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இணையத்தளத்தில் பதிவு செய்த பின்னரே வரும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

From around the web