எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா? கடும் சவால்களை சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்?

 
எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா? கடும் சவால்களை சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்?

காலை 11 மணி நிலவரப்படி பெரும்பாலான தொகுதிகளில் மூன்று சுற்றுக்களுக்கான முன்னிலை தெரிய வந்துள்ளது. திமுக அணி 136 தொகுதிகளிலும் அதிமுக அணி 96 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக உள்ளது.

160 இடங்களுக்குக் குறையாமல் திமுக அணி வெற்றி பெறும் என அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் தெரிவித்திருந்த நிலையில் 136 இடங்கள் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே தெரிகிறது. திமுகவுக்கு 111 இடங்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4, மமக 1, கொமதேக 1 என 117 இடங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு கிடைத்துள்ளது.

இன்னும் பல சுற்றுகள் செல்லவேண்டியிருப்பதால் திமுக அணிக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா அல்லது குறைந்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போல் ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. 

இறுதிச் சுற்றில் திமுக அணி வெற்றி பெற்றாலும் குறைந்த எண்ணிக்கையிலான பெரும்பான்மையே பெறக்கூடும் என்று தெரிகிறது. பாஜகவின் தந்திரோபாயங்களிலிருந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், மக்கள் மனதை வெல்லும் அளவுக்கு ஆட்சியை சிறப்பாக நடத்தவும் மு.க.ஸ்டாலினுக்கு கடும் சவால்கள் இருக்கும் என்றே தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறையாமல் இருப்பது, அந்தக் கட்சிக்கு புதுத் தெம்பைக் கொடுக்கும். திமுக ஆட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவிடமிருந்து அதிமுக விலகிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கட்சியை கபளீகரம் செய்துவிடும் பாஜக என்பதும் பொய்யாகிப் போய் விடும் என்றே தெரிகிறது.

மீண்டும் அதிமுக vs திமுக என்ற நிலையிலேயே தமிழ்நாட்டு அரசியல் தொடரும் வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது. கருணாநிதி vs ஜெயலலிதா என்ற நிலையிலிருந்து மு.க.ஸ்டாலின் vs எடப்பாடி பழனிசாமி என்ற நிலைக்கு நகர்ந்துள்ளதே இந்தத் தேர்தலின் முக்கிய முடிவாக இருக்கிறது.

சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்திற்கு அரசியல் எதிர்காலம் உண்டா, இல்லையா என்பதையும் முடிவு செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தன்னை உயர்த்திக் கொண்டார்.

From around the web