தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

 
CM-Stalin

தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்க முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாராவாரம் அரசு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் 19-ந் தேதி காலை 6 மணியோடு தற்போதைய ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது.

எனவே மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், அந்த காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்க அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஜூலை 16) காலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அடுத்த வார ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் என்னென்ன தளர்வுகளை வழங்கலாம்? தொற்று அதிகரிக்கும் சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி அளிக்கலாமா? இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இதுவரை திறக்க அனுமதி இல்லாத சூழலில் அவற்றை படிப்படியாக தொடங்கும் சூழ்நிலை உள்ளதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.

From around the web