தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் இன்று ஆலோசனை

 
Lockdown

தமிழ்நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து மக்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From around the web