ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது..? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

 
Madurai High Court

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது எனக் கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்றம், ஏன் இந்தி மொழியைக் கற்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஒன்றிய அரசு நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் பெயர் வைப்பதாகவும் கூறியிருந்தார்.

தமிழ்நாடு அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் இந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுவதாகவும், மக்கள் அனைவரும் எளிதில் திட்டங்களைப் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் மற்றும் எதிர் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியதோடு மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது எனவும் மொழியை, மொழியாகக் கையாள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறை ஆகிய துறைகளிடம் ஒன்றிய அரசின் திட்டங்களை மொழி பெயர்த்துத் தருமாறு கோரிக்கை வைக்கலாம் எனக் கூறினார்.

மனுதாரர் தரப்பில், தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறைகளில் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் வழக்கை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்கக் கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கருத்து  தெரிவித்துள்ளது.

From around the web