கோடநாடு வழக்கில் ஏன் பயம்..? விசாரணை நடத்துவதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி

 
SarathKumar

கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை என்றும் விசாரணை நடத்துவதில் தவறில்லை என ச.ம.க தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.நாதன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கத் திண்டுக்கல் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அசம்பாவிதங்கள் நடந்திருப்பது உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. கோடநாடு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படும் என்பதற்கு ஏன் பயப்படவேண்டும். நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியதுதான்.

இந்த வழக்கில் குற்றம் புரிந்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பற்றிய விசாரணை குறித்து முதல்வர் தான் பதில் சொல்லவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவு செய்யப்படும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web